இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை! என்னென்ன சிறப்பம்சங்கள்?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை, அகமதாபாத் இடையே தொடங்கப்படவுள்ளது. வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் மும்பை, அகமதாபாத் இடையே அமைக்கப்படவுள்ளது. இதன் மொத்ததூரம் 508கிமீ. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் இந்த வழித்தடம் 12 நிறுத்தங்களைக் கொண்டது. இரட்டை இருப்புப்பாதை வழிகளைக் கொண்டது.
இதை அமைப்பதற்கு ஆகும் செலவாக ரூ.1,08,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 81% அளவுள்ள நிதியான ரூ.88,000 கோடியை 0.1% வட்டிக்கு இந்தியா ஜப்பானிடம் இருந்து கடனாக பெறுகிறது. இதனை 50 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிச்செலுத்தினால் போதுமானது.
மொத்தமுள்ள 508 கிமீ-களில் 21 கிமீ தூரம் சுரங்கவழியில் அமைக்கப்படவுள்ளது. அதில் 7 கிமீ கடலுக்கடியில் செல்லும். அதிகபட்ச உற்பத்தி வேகம் 350 மணிக்கு கிமீ, செயல்படும் வேகம் 320 மணிக்கு கிமீ. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடையும். ஜப்பானின் தனியார் நிறுவனங்கள் இதற்கான கட்டுமானப்பணிகளைச் செய்யவுள்ளன.
குஜராத்தின் வதோதராவில் புல்லட் ரயில் துறை பணியாளர்களுக்கான பயிற்சிவகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. 2020க்குள் பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்டு 4,000 பணியாளர்கள் பணியிலமர்த்தப் படவுள்ளனர்.
மொத்த பயணநேரம் நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம், நிறுத்தங்கள் இல்லாமல் 2.07 மணிநேரம். பரமாரிப்பு டிப்போக்கள் குஜராத்தின் சபர்மதி மற்றும் மும்பையின் தானேவில் அமைக்கப்படவுள்ளன.
- ச.ப.மதிவாணன்