
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முக்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர் பீரப்பாய்(21). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சாக்ஷிதா(19) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருவரையும் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு இருவரையும் சமாதானம் பேசி அழைத்து வந்த பெற்றோர்கள் பீராப்பாய்க்கும் சாக்ஷிதாவிற்கு திருமணம் செய்து செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் மனைவிக்கு ருசியாக சமைக்கத் தெரியவில்லை என்று பீரப்பாய், மனைவி சாக்ஷிதாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சாக்ஷிதா வீட்டில் சாம்பார் வைத்திருக்கிறார். இதனைச் சாப்பிட்ட கணவர் பீரப்பாய் சாப்பார் ருசியாகவே இல்லை என்று கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் பீரப்பாய் கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவர் பீரப்பாய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாம்பார் ருசியாக இல்லாத காரணத்தால் காதல் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.