
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தற்கொலைப் படையாக செல்ல தயார் என்று கர்நாடக அமைச்சர் பி.எஸ்.ஜாமீர் கான் தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் பி.எஸ்.ஜாமீர் கான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாகவே இருக்கிறது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அனுமதி அளித்தால் நான் களத்திற்குச் செல்ல தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை மோடியும் அமித்ஷாவும் கொடுக்க வேண்டும். எனது உடலில் அதைக் கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை தாக்குவேன்” எனக் கூறியுள்ளார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.