Skip to main content

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பிச் சென்ற பா.ஜ.க பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The incident that happened to a trusted BJP administrator in telungana

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(36). தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப்குடா பகுதியில் ராமு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிணமாகக் கிடந்த ராமுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்கு இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பேரில், அந்த செல்போன் எண்ணைக் கொண்டு, அந்த பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யூசப்குடா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, இரவு நேரத்தில் ராமு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்த பெண் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் ராமுவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகரும் தொழிலதிபருமான ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமுவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி...” - முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
BJP to topple the Congress governt in Himachal says cm

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதே சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் இன்று (27-02-24) தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் ஒரேயொரு இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால்  பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் தாக்கூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக அம்மாநில முதல்வர் சுக்வீர்சிங் சுகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சி.ஆர்.பி.எப். வீரர்களும், ஹரியானா மாநில போலீசாரும் சேர்ந்து வாகனத்தில் கடத்திச் சென்று ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் அந்த இல்லம் மூடப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாநிலங்களவை எம்.பி. தேர்தலின் போது தேர்தல் அலுவலர்களை பா.ஜ.க.வினர் மிரட்டினர்.  மேலும் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க.வினர் சதி செய்கின்றனர்” எனப் புகார் தெரிவித்துள்ளார். 

Next Story

“அக்பர் பாலியல் வன்கொடுமை செய்பவராக இருந்துள்ளார்” - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Rajasthan BJP minister's controversial speech about Akbar

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வென்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, அங்கு முதல்வராக பஜன் லால் பொறுப்பேற்றார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், பேரரசர் அக்பர் குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

பள்ளி பாடத் திட்டங்களை ராஜஸ்தான் மாநில அரசு மாற்றி வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கல்வி அமைச்சர் மதன் திலாவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாங்கள் எதையும் மாற்ற விரும்பவில்லை. சில நெறிமுறையற்ற தகவல்களை திருத்த விரும்புகிறோம். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, அக்பர் மிகப்பெரியவர் என்று படித்தோம். நானும் அதைத்தான் படித்திருந்தேன். ஆனால் அவர் ‘மீனா பஜார்’ என்ற இடத்தை அமைத்து அழகான பெண்களை அழைத்துச் சென்று அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். 

பாலியல் வன்கொடுமை செய்பவர் எப்படி பெரிய ஆளுமையாக இருக்க முடியும். அக்பர் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்ததில்லை. அவர் ஒரு ஆக்கிரமிப்பாளராகவும், பாலியல் வன்கொடுமை செய்பவராகவும் தான் இருந்தார். அக்பரின் பெயரை இந்தியாவில் வைப்பதே பாவம். அக்பர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் இந்திய மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பல பாடப் புத்தகங்களில் சாவர்க்கர் தேசபக்தர் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீர் சாவர்க்கர், சிவாஜி போன்ற நம் முன்னோர்களைப் பற்றி பல தவறான தகவல்கள் உள்ளன. அந்த அறிக்கைகள் சரி செய்யப்படும். இன்னும் சில நாட்களில் எல்லாப் பள்ளிகளிலும் ‘சூர்ய நமஸ்காரம்’ வழக்கமாகிவிடும்” என்று கூறினார். அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சருக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.