Skip to main content

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Complaint against Prime Minister Modi in Election Commission

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் குடும்பமும், அதிகாரமும்தான் முக்கியம்’ என்று குற்றம் சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத்த கூடாது என்று காங்கிரஸும், சமாஜ்வாதியும் யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.  பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

Complaint against Prime Minister Modi in Election Commission

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், “மத ரீதியில் பாஜக தலைவர்கள் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இது போன்ற வெறுப்புப் பிரச்சார யுக்திகளை முளையிலேயே கிள்ளியெறிய வலியுறுத்திய போதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரதமர் மோடி மீது கொடுத்த புகாருக்கு அவரிடம் விளக்கம் கேட்காமல் பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் பிரதமர் மோடியும், அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸால் எந்த பயனும் ஏற்படவில்லை. பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டி வருகின்றனர். எனவே வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பாஜக தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வருவதை தேர்தல் ஆணையத்திடம் புகாராக அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்