
வளர்த்த அம்மாவையே 13 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜலஷ்மி கார் (54). இவர் 14 வருடத்திற்கு முன்பு,சாலையோரத்தில் இருந்த பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்துள்ளார். 13 வயதான அந்த பெண் குழந்தை தற்போது 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தனது வளர்ப்பு தாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ராஜலஷ்மியின் உறவினரிடம்அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அதன்படி, உறவினரும் சம்பவ இடத்திற்கு வந்த ராஜலஷ்மிக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜலஷ்மியின் சகோதரர் சிபா பிரசாத் மிஸ்ரா, சிறுமியின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், ராஜலஷ்மியை கொலை செய்துவிட்டு அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரண்டு ஆண்களுடன் சிறுமி மெசேஜ் செய்திருந்த உரையாடலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுமி, கோயில் அர்ச்சகர் கணேஷ் ராத் (21) மற்றும் அவரது நண்பர் தினேஷ் சாகு (20) ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 14 வருடத்திற்கு முன்பு ராஜலஷ்மியும் அவரது கணவரும், புவனேஷ்வரில் உள்ள சாலையோரத்தில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையைக் கண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்துள்ளனர். இதற்கிடையில், ஒரு வருட காலத்திலேயே ராஜலஷ்மியின் கணவர் இறந்துவிட்டார். அப்போதில் இருந்து, ராஜலஷ்மி தனியாக அந்தப் பெண்ணை வளர்த்து வந்தார். பல வருடங்களுக்கு முன்பு, தனது மகள் கேந்திரிய வித்யாலயாவில் படிக்க வேண்டும் என்பதற்காக, அவர் பராலகேமுண்டிக்கு குடிபெயர்ந்தார். மகளை அங்கேயே சேர்த்து, நகரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், அந்த சிறுமிக்கு கணேஷ் ராத் மற்றும் தினேஷ் சாகு ஆகிய இரண்டு நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் இந்த சிறுமி தொடர்ந்து பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் ராஜலஷ்மிக்கு பிடிக்காமல் போகவே, தனது மகளை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். இதனால், ராஜலஷ்மிக்கு மகளுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ராஜலஷ்மியை கொலை செய்தால் நமது உறவுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றும் ராஜலஷ்மியின் நகைகள், பணத்தை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் செலவழிக்கலாம் என கணேஷ் ராத், சிறுமிக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த சிறுமி, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தனது வளர்ப்பு அம்மாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளா. ராஜலஷ்மி சுயநினைவை இழந்தவுடன் கணேஷ் மற்றும் தினேஷை அழைத்துள்ளார். அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்து ராஜலஷ்மியின் முகத்தில் தலைகாணியை அழுத்தி வைத்து கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர், தனது தாய்க்கு மாரடைப்பு வந்துள்ளதாகக் கூறி ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் தாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அனைவரையும் அந்த சிறுமி நம்ப வைத்துள்ளார். ராஜலஷ்மி இதய நோயாளி என்பதால், இது குறித்து எந்தவித கேள்வியும் எழவில்லை. அதன் பின்னர், மூன்று பேரும் ராஜலஷ்மியின் தங்க நகைகளை, ஒரு கடையில் அடகு வைத்து ரூ.2.4 லட்சத்தை வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து 30 கிராம் நகைகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.