Skip to main content

மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!

Published on 21/11/2017 | Edited on 22/11/2017
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை! 

பெரியத்தை ஜெயலலிதா எனக்கு அப்பா மாதிரி. சின்னத்தை சசிகலா எனக்கு தலைவர் மாதிரி. இளவரசி என்னுடைய தாய் என்று கூறுகிறார் ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் நிர்வாக இயக்குனரான விவேக்.

சமீபத்தில் ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றில் நடந்த வருமானவரிச் சோதனைகளைத் தொடர்ந்தே இவருடைய பெயரும் முகமும் பாப்புலர் ஆனது.

2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில், அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்த சமயத்தில்தான் விவேக் முதன்முதலில் மீடியாக்களில் அறிமுகமானார்.

அதற்குமுன் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

விவேக் ஒன்றரை வயது பையனாக இருக்கும்போது அவருடைய தந்தையும் சசிகலாவின் தம்பியுமான ஜெயராமன், ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.

விவேக்கின் மூத்த சகோதரிகளான ஷகீலாவும், கிருஷ்ணப்பிரியாவும் மன்னார்குடி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கையும், அவருடைய அம்மா இளவரசியையும் போயஸ் கார்டனுக்கு வரவழைத்தார் ஜெயலலிதா.



திருமணத்தின்போது சசிகலா, இளவரசியுடன் விவேக்

அப்போதிருந்து ஜெயலலிதாவின் வீடே தனது வீடாக வளர்ந்திருக்கிறார் விவேக். ஆனால், மூன்று விதமான பெண்களின் பாதுகாப்பிலும் வளர்ப்பிலும் பத்திரமாக வளர்ந்திருக்கிறார்.

பெரிய தாய் ஜெயலலிதா அவருக்கு ரொம்பவும் செல்லம் கொடுப்பாராம். அவருடைய குறும்புகளை ரசித்து பாதுகாப்பாராம். விவேக்கிற்கு பத்து வயது இருக்கும்போது ஜெயலலிதா அவருக்கு பாணா காத்தாடியை பரிசாக கொடுத்தாராம். ஆனால், போயஸ் தோட்டத்து மொட்டை மாடியில் பட்டம் விடும்போது நான்கு போலீஸ்காரர்களையும் ஒரு வேலையாளையும் பாதுகாப்புக்கு அனுப்பினாராம்.

விவேக்கை திட்டுகிற, அடிக்கிற ஒரே ஆள் சின்னத்தாய் சசிகலா மட்டும்தானாம். விவேக்கிற்கு எது நல்லது என்பதை அவர்தான் தீர்மானப்பாராம். கிட்டத்தட்ட ஒரு பாஸ் மாதிரி அவர் இருந்தார் என்று விவேக் கூறுகிறார்.

சிட்னியில் பிபிஏ படித்துவிட்டு, புனேயில் எம்பிஏ முடித்தவரை போயஸ் கார்டனுக்கு வருவதை சசிகலா தவிர்த்தாராம். பின்னர் சாம்சங் கம்பெனியில் பயிற்சி முடித்த பிறகு, ஐடிசி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

அந்த நிறுவனத்தில் பணிபுரியும்போது, சென்னை பிராஞ்ச்சுக்கு மாற்றல் கேட்டிருக்கிறார். இதை சசிகலா அனுமதிக்கவில்லையாம். அடிக்கடி போயஸ்கார்டனுக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஐடிசியில் வேலை செய்யும்போது விவேக் சாதாரண ஊழியராகத்தான் இருந்திருக்கிறார். யாருக்கும் அவருடைய பின்னணி தெரியாதாம்.

2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது விவேக் தனது மேலாளரிடம் விடுமுறை கேட்டிருக்கிறார். எதற்கு என்று கேட்டபோது உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சொல்கிறார் விவேக்.

உடனே நிறுவன மேனேஜரிடம் ஒரு பயம் தெரிந்திருக்கிறது. அவர் விவேக்கை அழைத்துப் போய் காபி கொடுத்து உபசரித்திருக்கிறார். தன்னை தாயாக வளர்த்தவர்களின் சிறை வாழ்க்கை விவேக்கை ரொம்பவே பாதித்திருக்கிறது. நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆகும்வரை பெங்களூரிலேயே தங்கி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் விவேக்.

மீண்டும் கம்பெனிக்கு போனபோது கம்பெனி முதலாளியே விவேக்கிடம் மிகவும் மரியாதையாக பழகியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு காரியம் செய்து தரும்படி கேட்டிருக்கிறார்கள். உடனே, வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்திருக்கிறார்.

ஐடிசி போன்ற கம்பெனிகளில் பெற்ற சம்பளம் அளவுக்கு வேறு நிறுவனங்களில் வேலை தேடியிருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சிகளில் முகம் காட்டப்பட்டு அவர் பாப்புலர் ஆகிவிட்டார். இதையடுத்து வேலை தேடும் முயற்சியை கைவிட்டார்.

இந்தச் சமயத்தில்தான் ஜாஸ் சினிமாஸின் பொறுப்பை ஏற்கும்படி சசிகலா கூறியிருக்கிறார்.  அதைத் தொடர்ந்து ஜெயா டி.வி.யின் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் சினிமாஸின் முந்தைய உரிமையாளரான ஹாட் வீல்ஸ் என்ஜினியரிங் சம்பந்தமாக எதுவுமே தனக்கு தெரியாது என்கிறார் விவேக்.

"வருமானவரித் துறை ரெய்டு எனக்கு புதிது. என்னமாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. இருந்தாலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னேன். அவர்கள் அவர்களுடைய கடமையைத்தான் செய்தார்கள். ஜாஸ் சினிமாஸில் உள்ள எனது அறைக்கு சீல் வைத்திருக்கிறார்கள். எனது மனைவியின் நகைகள் குறித்து கேட்டார்கள். நல்லவேளையாக அவற்றுக்கு எனது மாமனார் ஆவணங்களை வைத்திருந்தார். அவற்றை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இனி எப்படி போகிறது என்பதைப் பொறுத்தே இதில் அரசில் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்" என்கிறார் விவேக்.

இதுவரை போயஸ் தோட்டத்தின் பிள்ளையாக இருந்தேன். அம்மாவின் மரணத்துக்கு பிறகு நிறைய மாறிவிட்டது. முன்பு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. என்னை நோக்கி ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. நாளை எனக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுச் செய்ய வேண்டியது எனது கடமையாகவே நினைப்பேன்.



வருமான வரி சோதனையின்போது..

இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் இருக்கும் சின்னத்தாயையும், எனது அம்மாவையும் போய் பார்க்கிறேன். அவர்கள் நன்றாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அது பொய் என்பது தெரியும். இப்போது அவர்களுக்கு கஷ்ட காலம். அதைக் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் விவேக்.

மன்னார்குடி குடும்பம் என்ற வட்டத்தில் சேராமல் நான் ஒருவன்தான் வளர்க்கப்பட்டேன். நான் ஒருவன்தான் மன்னார்குடி குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டவன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மன்னார்குடி குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையாகவே நினைக்கிறேன் என்று தெம்பாகவே சொல்கிறார் விவேக்.

அவருடைய படிப்பறிவும், நம்பிக்கையும் ஜெயா டி.வி.யை புதிய நிலைப்பாடுக்குள் திருப்பியிருக்கிறது.

திமுக நிகழ்ச்சிகளையோ, கலைஞர் மற்றும் திமுக தலைவர்களையோ ஜெயா டி.வி. இதுவரை நல்லபடியாக காட்டியதே இல்லை. அதாவது உள்ளது உள்ளபடி காட்டியதே இல்லை. அதிலும் திமுக தொடர்பான நிகழ்வுகளை காட்டியதே இல்லை.

ஆனால், கலைஞரை மோடி பார்க்க வந்த நிகழ்வை முதன்முறையாக நேரடியாக ஒளிபரப்பியது ஜெயா டி.வி.

அதன்பிறகு நவம்பர் 8 ஆம் தேதி மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக நடத்திய கருப்புதின  போராட்டத்தையும் ஜெயா டி.வி. லைவ்வாக ஒளிபரப்பியது.

மேலும் ஒரு வியப்பான நிகழ்ச்சியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேட்டியையும் நவம்பர் 19 ஆம் தேதி ஒளிபரப்பியது.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களிடம் கேட்டால்...

"விவேக் சொல்கிறார், நாங்க செய்கிறோம்" என்று கூலாக கூறுகிறார்கள்.

- ஆதனூர் சோழன்
படம் - குமரேஷ்

சார்ந்த செய்திகள்