Skip to main content

தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
தமிழ் திரையுலகம் கொண்டாடும்  அருவி!

அப்படி என்னதான்  இருக்கிறது?





கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ் திரைப்பட உலகில் பலரும் பேசிக்கொள்ளும் வார்த்தையாக 'அருவி' இருந்தது. ஏற்கனவே திரைத்துறையினருக்கும், படைப்புலகினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படிப்படியாக பல சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக 'அருவி' இருக்கும் என்று பாராட்டுகின்றனர், சிலாகிக்கின்றனர். அருவியில் அப்படி என்ன இருக்கிறது? படத்தின் கதையை, திரையரங்குகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.  படத்தில் ஸ்பெஷலாக என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன...         
       

- மாநகரம், ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று என்று மிக தரமான படவரிசை ஒன்றை உருவாக்கியிருக்கும் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, தங்களது 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் 'அருவி'யை  தயாரித்திருக்கிறார்கள்   

- 2013இல் தொடங்கப்பட்ட இந்தப் படம்  முதலில் திரைப்பட விழாக்களுக்கு மட்டும் அனுப்பும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது. பின்னர் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பிரபுவின்  மனைவி, உறவினர் ஆகியோர் காட்டிய உற்சாகத்தில் தான் திரையரங்குகளில் வெளியிடும் தைரியம் வந்ததாம் 

- மும்பை, டெல்லி, ஷாங்ஹாய், கேரளா, பஞ்சாப் என பல திரைப்பட விழாக்களுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது அருவி 





- இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன், 'அண்ணாமலை' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில்  சிறுவனாக நடித்தவர்  

- முதலில் சமந்தா அல்லது நயன்தாராவை அணுகலாம் என்று நினைத்தவர்கள் பின் புதுமுகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்து  கிட்டத்தட்ட 500 பேரை ஆடிஷன் செய்து நாயகி அதிதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் 





- ஒரு  அருவி எப்படி விழுந்து, பாய்ந்து, வளைந்து, தயங்கி, விரைந்து  ஓடுகிறதோ அப்படி பல திருப்பங்களுடன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண் தான் அருவி, அவள் வாழ்க்கை தான் படம் 

- ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுவாள் அருவி. வாழ்வின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவளாக ஒரு கட்டத்தில், வாழ்வை வெறுப்பவளாக ஒரு கட்டத்தில், உலகத்தின் மேல் கோபம் கொண்டவளாக ஒரு கட்டத்தில், சுற்றியிருப்பவர்களை நேசிப்பவளாக ஒரு கட்டத்தில் என திருப்பங்களுடன் நிற்காமல் ஓடுகிறாள் அருவி 







- ட்ரைலரை பார்க்கும்பொழுது  அருவி ஒரு தீவிரவாதியோ என்று தோன்றுகிறது. ஆனால், படத்தில் அருவி அப்படி விசாரிக்கப்படுவதற்கான  காரணம் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும் 

- உண்மையை சொல்லும் ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை வச்சு செஞ்சுருக்காங்க படத்தில். அந்தப் பகுதி, சிரிப்புக்கும் அதிர்ச்சிக்கும் பொறுப்பு. அதில் முக்கிய வேடத்தில் 'பீமா'வில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடித்த  'லக்ஷ்மி கோபால்ஸ்வாமி'  நடித்துள்ளார்  







- வளரும் பெண்ணின் வாழ்வை, பெண்களுக்குள் பேசிக்கொள்ளும் விஷயங்களை இத்தனை உண்மையாக இதுவரை தமிழ் படங்கள் சொன்னதில்லை 

- திருநங்கைகளின் வாழ்வையும் பக்கத்திலிருந்து சொல்கிறது அருவி 

- ஊடகங்களின் செய்திப் பசி, இப்பொழுதும் கூட வேலைக்கு வரும்  பெண்களை  ஆண்கள் பார்க்கும் பார்வை, நம்பிக்கையும் அனுசரணையும் காட்டாத உலகம் என பல கோபங்கள் வெளிப்படும் படம் 'அருவி'





- அருவி ஒரு அரசியல் படம் இல்லை, ஆனால் அது பேசாத அரசியல் இல்லை 

- அருவியின் வாழ்க்கை  அமைதியும் பசுமையும் நிறைந்த இடத்தில் தொடங்கி, புழுதி நிறைந்த  பரபரப்பான இடத்துக்கு நகர்ந்து அமைதியாக முடிகிறது. கதை நிகழும் இடங்களும் அப்படித்தான் இருக்கிறது 

- படத்தின் ஒளிப்பதிவு பெரும்பாலும் நிகழ்விடத்தின் வெளிச்சம், ஒளி இவற்றை வைத்து மிக சாதாரணமாக, உண்மையாக செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களில் செய்யப்படும் வண்ண திருத்தம் உள்ளிட்ட அடிப்படை தொழில்நுட்பங்களை கூட தவிர்த்து உண்மையான ஒரு ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ளது 

- இத்தனை கலை தன்மைகள் இருக்கும் படம் 'போர்' அடிக்குமே என்று பயப்பட தேவையில்லாத அளவுக்கு, அருவி நம்மை சிரிக்கவைப்பாள், அழ வைப்பாள், வெட்கப்பட வைப்பாள், கோபப்பட வைப்பாள்.

VBK 

சார்ந்த செய்திகள்