அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
ரெய்டு குறித்து நாஞ்சில் சம்பத்
மன்னார்குடி, ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி அலுவலகம் எல்லாம் முடித்து இப்பொழுது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வரை சென்றுவிட்டது ரெய்டு. போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த ரெய்டில் பரபரப்படைந்திருக்கிறது தினகரன் அணி. அந்த அணியின் கொள்கை பறப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்...
1800 அதிகாரிகளை ஒரே நாளில் களம் இறக்கி சசிகலா ரத்த சொந்தமுள்ள உறவுகள், நண்பர்கள் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தியதன் மூலம், வருமான வரித்துறை ஒரு வரலாறு காணாத ரெய்டை நடத்தி இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த வருமான வரி சோதனையை அவர்கள் இப்படி நிகழ்த்தியிருப்பதன் மூலம் அஇஅதிமுக என்கிற அமைப்பை சீர்குலைப்பதற்கும், சின்னாபின்னாமவதற்கும் எடுத்திற்கிற ஒரு சர்ஜிக்கல் ஆபரேசனாகவே நான் இதை பார்க்கிறேன்.

ஆட்காட்டியாக இருப்பதிலே சுகம் காணுபவர்கள், காட்டிக்கொடுப்பதற்காகவே காலடியை தேடுபவர்கள் இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ததற்கு பிறகும் இந்த இயக்கம் தொலைந்துவிடவில்லை. கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களுக்கு நாளும் நன்மை செய்த இந்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற கவலையும் கரிசணமும் தொண்டர்களுக்கு இன்னமும் இருக்கிறது.
ஒரே நாளில் 1800 அதிகாரிகளை களம் இறங்கி வருமான வரி சோதனையை நிகழ்த்தியவர்கள், அன்றைக்கு ஏன் போயஸ் கார்டனில் சோதனை போடவில்லை. அன்றைக்கு சோதனை போடாமல் இன்று சோதனை போட்டியிருப்பதின் பின்னணி என்ன. அன்றைக்கு சோதனை போட்டியிருந்தால் அந்த ரெய்டோடு சேர்ந்து இதுவும் முடிந்து போயிருக்கும்.
ஆனால் இன்றைக்கு போட்டதன் பின்னணியில் நாங்கள் கர்ப்ப கரகத்திலேயே கால் வைத்துவிட்டோம், கோடிக்கணக்கான தொண்டர்கள் வழிபட்ட கோவிலுக்குள்ளேயே நாங்கள் நுழைந்துவிட்டோம் என்று மருந்தாலும் குணப்படுத்த முடியாத மன உளைச்சலை கழகத்தினுடைய சாமானிய தொண்டர்களுக்கு தருவதற்கு இன்றைக்கு அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இல்லாவிட்டால் அன்றைக்கே போயஸ் தோட்டத்திலும் சேர்ந்து சோதனை நடத்தியிருக்கலாம்.
ஆகவே அடுக்கி வருகிறது சோதனை, அடுக்கடுக்காக வருகிறது துன்பம், தொடர்ந்து துயரமும், சதியும் எங்களை துரத்திக்கொண்டிருக்கிறது. எங்களை இப்படி அவமானப்படுத்தவன் மூலம் மகிழ்ச்சியடைகிறவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆயுள் மிகக்குறைவாக இருக்கும். நாங்கள் இந்த எல்லா சோதனைகளையும் உள்வாங்கிக்கொண்டு இந்த இன எதிரிகளுடைய அறைகூவலுக்கு முகம் கொடுத்து மிகுந்த மலிவோடும், பொலிவோடும் மீண்டும் எழுந்து நிற்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எங்கள் டிடிவி தினகரன் நிரூபிப்பார்.
இந்த சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் பின்னணிதான் காரணம். வித்யாசாகர் என்கிற ஒரு கவர்னரை தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநராக நியமித்து ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.ஸை மாட்டுத்தரகர் மாதிரி கூட்டி வைத்தது யார். எனக்கு அருதிப்பெரும்பான்மை இருக்கிறது, ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று சசிகலா கடிதம் கொடுத்தப் பிறகு அழைக்காமல் தாமதப்படுத்தியது யார். ஆகவே இதில் பெரிய அரசியல் பின்னணி இருக்கிறது. அரசியல் சதி இருக்கிறது. அரசியல் வன்மம் இருக்கிறது.
-வே.ராஜவேல்