Skip to main content

பெரியபாண்டி குடும்பத்திற்கு போய் சேராத ரூ. 1 கோடி!

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
பெரியபாண்டி குடும்பத்திற்கு போய் சேராத ஒரு கோடி ரூபாய்! 

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தாலோ, இயற்கை சீற்றங்களிலோ உயிரிழப்புகள் ஏற்பட்டால் இழப்பீடாக பெரிய தொகை வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவிப்பார். அவருடைய பாணியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு நிகழ்வுகளில் மிகப்பெரிய தொகையை இழப்பீடாக அறிவித்து வருகிறார். ஆனால் அரசு அறிவித்த இழப்பீடு தொகை வராதா என்று இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் காத்திருக்கின்றனர். 

சென்ற ஜூலை மாதம் சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் மரணமடைந்த தீயணைப்புத் துறை அதிகாரி ஏகராஜ் இறந்தபோது அவரின் குடும்பத்திற்கு ரூ 16லட்சம் மற்றும் அரசு வேலை தருவதாக அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால் இன்று வரை அந்த உதவிகள் அக்குடும்பத்திற்குப் போய்ச் சேரவில்லை என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சமீபத்தில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த தொகையும் இதுவரை வந்து சேரவில்லை என்று காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையொன்றில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காகத் தனிப்படையுடன் ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அங்கு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் மறைந்த பெரியபாண்டி குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதுவரை இந்த நிதியும் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு சென்றடையவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஒரு நேர்மையான அதிகாரியின் இழப்பும், நிவாரண நிதியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பும் வேதனையானது.

அரசின் இந்த அலட்சியப் போக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனிடம் நக்கீரன் இணையதளம் தொடர்புகொண்டது. 

அப்போது அவர் கூறியது...

இயற்கை சீற்றம் போன்ற பாதிப்புகள் அல்லது எதிர்பாராத விபத்துகள், இறப்புகள் வருகிறபோது அரசு தரப்பில் அதற்குரிய நிவாரணங்கள் முதல் அமைச்சர் மூலமாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருப்பதால், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோரிக்கைகள் வலுத்த நிலையில் முதல் அமைச்சர் முதலில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்று அறிவித்தார். பின்னர் 13 தினங்களுக்கு பின்னர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார்.

கேரள அரசாங்கம் இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய், இறந்துபோனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறது. குமரி மாவட்ட மக்கள் கேரள அரசு அறிவித்ததுபோல தமிழக அரசு அறிவித்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மாநில அரசு 20 லட்சம் ரூபாய் மட்டுமே  அறிவித்தது. அதுவும் இதுவரை சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. கண்டனத்திற்குரிய செயலாகும்.



அதேபோல் காவல்துறை அதிகாரி பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், மாநில அரசு அவருடைய குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் என்று அறிவித்தது. அந்த குடும்பத்தின் கல்வி செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தது. ஆனால் இதுவரையில் பெரியபாண்டி குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி கிடைக்கவில்லை என்று நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

அரசு மூலமாக அறிவிக்கப்படும் இதுபோன்ற அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக இருக்கக் கூடாது. மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள். உடனடியாக இதுவரை யார் யாருக்கு என்னென்ன நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டதோ, அவற்றை உடனடியாக கிடைக்க செய்வதற்கு அரசு, குறிப்பாக, முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

-வே.ராஜவேல்


சார்ந்த செய்திகள்