Skip to main content

அரசியலில் வெற்றிடமும் புதிய அரசியலும்!

Published on 28/12/2017 | Edited on 29/12/2017



ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், அவர் சிகிச்சை பெறும் படத்தையோ, மருத்துவமனையில் நடைபெற்றதாக கூறப்படும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தின் படத்தையோ வெளியிடும்படி கலைஞர் கேட்டார்.

கலைஞரின் இந்த வேண்டுகோளை திருநாவுக்கரசர், வைகோ, தமிழிசை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன்பிறகு சில நாட்களில் கலைஞரிடமிருந்து வெளிவரும் அறிக்கைகளோ, பேட்டிகளோ வெளிவரவில்லை.

அவருடைய அறிக்கைகள் வெளிவராத நிலையில் கலைஞரின் உடல்நிலை குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, கலைஞர் சளித்தொல்லையால் அவதிப்படுவதாக திமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டது. கலைஞர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதாகவும், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. கலைஞரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு உருவானது. இரண்டு முக்கிய இயக்கங்களின் தலைவர்கள் ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மட்டுமே தொடர்ந்து வதந்திகள் பரவுவதும், அதை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மறுப்பதுமாக நாட்கள் கடந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை கலைஞரின் மனைவி ராஜாத்தி அம்மாள், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், மற்றும் திமுக முன்னணி தலைவர்களும் கூட சென்று பார்த்தனர்.






தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துக் கிடந்தது. அதைப்பற்றி யாரும் கேள்விகூட எழுப்புவதில்லை. ஆளுநரே தமிழகத்திற்கு விசிட்டிங் புரபஸர் மாதிரி தேவைப்பட்டால் மட்டுமே வந்தார்.

இந்நிலையில்தான் 2016 டிசம்பர் 1 ஆம் தேதி கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டதைப் போலவே, நீர்ச்சத்துக் குறைவு மற்றும் சளித்தொந்தரவுக்காக சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டது.

கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்காம் நாள், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணச் செய்திகூட கலைஞருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அன்று இரவே ஒ.பன்னீர் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.





ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையிலேயே தங்கியிருந்தார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும்வரை அவர் கூடவே இருந்தார். ஜெயலலிதாவால் வீட்டிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி இடம்பிடித்திருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த மோடி சசிகலாவின் தலையை தடவி ஆறுதல் சொன்னார். அடக்கம் செய்யப்படுவதற்கு சிறிது நேரம் முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்தார்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க அனைவரும் ஒப்புக்கொண்டு, அவருடைய காலில் விழுந்து வணங்கத் தொடங்கினார்கள்.

முதலில் காலில் விழுந்தவர் பன்னீராகத்தான் இருந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் வரிசையாக விழுந்தனர்.





அடுத்து வந்த நாட்களில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே நாகரிகமான அணுகுமுறை தொடங்கியது. இதுவரை இருந்த பகை அரசியல் மாறி, மற்ற மாநிலங்களைப் போல சுமுகமான அரசியல் உறவு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான், ஜல்லிக்கட்டு விவகாரம் பூதாகரமாக உருவாகியது. 2006 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரேக்ளா ரேஸுக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, யாரும் எதிர்பாராதவிதமாக விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளுக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தார்.

அப்போது தொடங்கியது ஜல்லிக்கட்டுக்கு தடை விவகாரம். கலைஞர் முதல்வராக இருக்கும்வரை இந்தத் தடையை விலக்குவதற்கு வழக்காடியதுடன், ஏதோ ஒரு வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெறப்பட்டது.

ஜெயலலிதா முதல்வரான பிறகும்கூட 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஏதோ ஒரு வகையில் அனுமதி பெற்று நடத்தப்பட்டது. 2014ல் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததில் இருந்து ஜல்லிக்கட்டு விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அந்த ஆண்டுதான் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்திருந்தது. அப்போதுதான் ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டா தன்னை இணைத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

நமக்கு நாமே பயணம் தொடங்கிய சமயத்தில் அலங்காநல்லூர் வந்த ஸ்டாலின் 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

இதையடுத்து மீண்டும் ஜல்லிக்கட்டு பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. 2015 டிசம்பர் மாதம் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு நடந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலைஞரைச் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று உறுதி அளித்தார். அதையடுத்து அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், 2016 ஆம் ஆண்டும் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து ஏமாற்றியது மோடி அரசு.

இந்நிலையில்தான் 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று முதல்வரான ஜெயலலிதா, நான்கே மாதங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து முதல்வராக பன்னீர் பொறுப்பேற்றார்.

2017 ஜனவரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் தயாராகி வந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழர்களின் கோபத்தை கிளறியது. பொறுமையிழந்த தமிழக இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் குதித்தனர்.





அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே தொடங்கிய போராட்டம் தமிழக மக்களுடைய உரிமைப் போராட்டமாக உருவெடுத்தது. சென்னை மெரினா பீச்சில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அமைதிவழிப் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்தது.

ஆனால், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்திருப்பதாகக் கூறி பாஜகவினர் புரளியைக் கிளப்பிவிட்டனர். குடியரசு தினம் நெருங்கிய நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க அரசு அடக்குமுறையை கையில் எடுத்தது. ஏராளமான இளைஞர்கள் ரத்தம் சிந்தினர். போராட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்த மீனவர் குடும்பங்களும் போலீஸின் தாக்குதலுக்கு ஆளாகின. போலீஸே வாகனங்களுக்கு தீவைத்ததையும், வாகனங்களை அடித்து நொறுக்கியதையும் காணமுடிந்தது.

இனி எந்த ஒருபிரச்சனைக்கும் இதுபோன்ற போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதாக கூறப்பட்டது

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தாலும், அதையும் எதிர்த்து பீட்டா அமைப்பு மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது என்றாலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை இனி தடை செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் முடித்து வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் பன்னீரின் பதவிக்கு வந்தது ஆபத்து. சசிகலாவே தமிழக முதல்வராக திட்டமிட்டார். கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வரும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் பேசத் தொடங்கினார்கள். இதையடுத்து பன்னீரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் சசிகலாவை முதல்வராக பரிந்துரைத்துவிட்டு வெளியே வந்த பன்னீர், திடீரென்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். பிறகு மீடியாக்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக செல்வதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

பன்னீரை பாஜக இயக்கியது. ஆனால், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 122 பேர் கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் தங்க வைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது நடக்கும்போதே, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மற்ற மூவரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதாவிடமிருந்து 100 கோடி அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இக்கட்டான நிலையில் தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தார் சசிகலா. ஆனால், பதவியேற்புக்கு அழைக்காமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் கடத்திக் கொண்டிருந்தார். தனக்குப் பதிலாக கட்சியை கவனிக்க தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.

தன்னிடம் எம்எல்ஏக்கள் ஓடி வருவார்கள், கட்சியின் நிர்வாகிகள் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த பன்னீருக்கு 11 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருந்தனர். பன்னீரால் அதிமுகவையோ, ஆட்சியையோ கைப்பற்ற முடியாது என்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை அரசு அமைக்க அழைத்தார் ஆளுநர்.





சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தும்படி பன்னீரும், ஸ்டாலினும் கூறினார்கள். அதை ஏற்கவில்லை. இதையடுத்து சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த நிலையில் எடப்பாடி டெல்லி சென்றார். பிரதமர் மோடியைச் சந்தித்த அவர் பன்னீரைக் காட்டிலும் சிறந்த அடிமையாக மாறத் தொடங்கினார். அதிமுகவின் இரண்டு பிரிவினரும் மோடியை அடிக்கடி சந்தித்து தங்கள் விசுவாசத்தை காட்டினார்கள். அதிமுகவிலிருந்து தினகரனையும் சசிகலா குடும்பத்தையும் ஒழித்துக்கட்ட பாஜக திட்டமிட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

அதேசமயம், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தின் மூலமாக தனது செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்தது. தமிழகத்தில் மருத்துவக்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை, கடுமையான எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தியது பாஜக அரசு. நீட் தேர்வை இந்த ஆண்டுக்காவது ரத்து செய்ய வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை கேலிக்குரியதாக்கியது பாஜக அரசு.

இதன்விளைவாக அனிதா என்ற ஏழை தலித் மாணவி தனது மருத்துவக் கனவு கலைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தமிழகத்தை உலுக்கியது. ஆனாலும், பாஜக இதற்காக ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. அதற்குபதிலாக பன்னீர் செல்வம் அணியையும், எடப்பாடி அணியையும் இணைத்து அதிமுகவையும், கட்சியின் சின்னத்தையும் அந்த அணிக்குக் கிடைக்கச் செய்வதில் பாஜக வெற்றி பெற்றது.

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருக்கும் கலைஞர் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தலைவர்களையும், தொண்டர்களையும் அவ்வப்போது சந்திக்கிறார். 2016 தேர்தலில் திமுகவை கடுமையாக எதிர்த்த வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கலைஞரை நேரில் சந்தித்தனர்.






திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை புகாரிலிருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய நிம்மதி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக மத்திய அரசும், சிபிஐயும் கூறியிருக்கின்றன. இந்தத் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்திருக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், பாஜக முயற்சியால் பெற்றுத்தரப்பட்ட அதிமுக என்ற பெயரோ, இரட்டை இலைச் சின்னமோ, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றியை தடுக்க முடியவில்லை. பணத்தால் வெற்றிபெற்றதாக அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் கருத்து தெரிவித்தாலும், தமிழகத்தின் அரசியல் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கப்போகிறது...

ஒன்று மட்டும் நிச்சயம். தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் வாக்குகளைக்கூட பாஜகவால் ஒருபோதும் பெற முடியாது.

(நிறைவடைந்தது)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதி :

சார்ந்த செய்திகள்