Skip to main content

நேரு துவங்கினார்... மோடி திறந்தார்...

Published on 19/09/2017 | Edited on 19/09/2017

நேரு துவங்கினார்... மோடி திறந்தார்...


சர்தார் சரோவர் அணையின் விலை !!!  



கடந்த செப்டம்பர் பதினேழு அன்று, பிரதமர் மோடி, தன் பிறந்தநாள் அன்றே,  சர்தார் சரோவர் அணையை   மக்கள் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்தார்.  இந்த  அணை நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையாகும். இது குஜராத் மாநிலத்தின் ‘நவகம்’ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சுமார் 535 அடி உயரம் ஆகும். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் இதுவே மிகப்பெரிய அணை ஆகும். இந்த அணை உலகின் பெரிய அணையான அமெரிக்காவின் 'கிராண்ட்  அணை'க்கு அடுத்து இரண்டாவது  இடத்தில் உள்ளது. 





நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய இந்த திட்டம், பல்வேறு போராட்டங்கள், தடைகளை சந்தித்து 56 ஆண்டுகளுக்குப்  பின், பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம், குஜராத் மாநிலத்தில், 10 ஆயிரம் கிராமங்களுக்கு குடி தண்ணீர் வசதியும், பல கிராமங்களுக்கு பாசனத்துக்கும் நீர் கிடைக்கும். இதையொட்டி, வதோதரா மாவட்டம் தபோய்நகரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  “உலகில் வேறு எந்த திட்டமும், இந்த அளவுக்கு அதிக தடைகள், போராட்டங்களை சந்தித்திருக்காது. பொறியியல் ஆச்சரியம் என கூறப்படும், சர்தார் சரோவர் அணைத்  திட்டத்துக்கு எதிராக, பல சதிகள் நடந்தன. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில், நாம் உறுதியுடன் இருந்தோம். அதனால், தடைகளைக்  கடந்து, மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பலன் தரக் கூடிய இந்தத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத்  திட்டம் குறித்த தவறான பிரசாரங்களால், உலக வங்கி கடனுதவி அளிப்பதை நிறுத்தியது. உலக வங்கி கடன் அளிக்க மறுத்தபோது, குஜராத் கோவில்கள் நன்கொடை அளித்தன. அணை கட்டுவதற்காக இடம் பெயர்ந்த மலைவாழ் மக்களின் தியாகத்தை, இந்த நாடு எப்போதும் மறக்காது” என்று கூறினார்.




  இந்த அணை கட்டும்போது ஏற்பட்ட  தடைகளின் பின்னனி என்னவென்று பார்ப்போம்.1965 ஆம் ஆண்டு கோஸ்லா  கமிட்டி 530 அடி அணை ஒன்றை நவகத்தில் கட்டி, அதில்  கிடைக்கும் நீரை மத்திய பிரதேசத்திற்கும், குஜராத்துக்கும்  பிரித்துக்  கொள்ளச்  சொல்லியது. ஆனால் குஜராத்தும் மத்திய பிரதேசமும் செலவைப்  பிரித்துக்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டது.1969ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நர்மதா நதி  நீர் ஆணையம் அமைத்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். இதன் பிறகு மத்திய பிரதேசம் உயரம் 210 அடியாக இருக்க வேண்டும் என்று சொல்ல, குஜராத்தோ 530 அடி உயரம் இருந்தால்தான் குஜராத் பயனைடையும் என்று வாதிட்டது. முடிவில், 1979 ஆம் ஆண்டு 435 அடி என்று ஏற்று கொண்டனர். இந்த நதியின் குறுக்கே 30 அணைகள்,300 சிற்றணைகள்  கட்ட 1985ம் ஆண்டில் உலக வங்கியிடம் 450 மில்லியன் பணம் உதவியடன் தொடங்கியது. ”நர்மதா பச்சாவ் அந்தோலன்” என்ற ஒரு இயக்கம் மேதா பட்கர் தலைமையில்  இதனை எதிர்த்துப்  போரடத்  தொடங்கியது. சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலகட்டதிலேயே 10 லட்சம் மக்களை திரட்டி போராடினர். இந்தத்  திட்டத்தால் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம்,காடுகள் எல்லாம் அழிக்கப்படும் என்பதும் '100 கிராமங்களைக்  வாழவைக்க  1000 கிராமங்களை அழிக்காதே என்பதுமே  இவர்களின் முழக்கமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு. 




முதலில் இந்த அணைக்கு நிதியளிக்க ஒத்துக்கொண்டிருந்த உலக வங்கி, 1992 ஆம் ஆண்டு இந்த போராட்டங்களையும், சுற்றுச் சூழல் தாக்கங்களையும் காரணம் காட்டி, நிதியளிக்க  மறுத்தது. இருந்தாலும் குஜராத் கோவில்கள் சேர்ந்து,  200 மில்லியன் பணம் தந்து உதவியது. 1995ம் ஆண்டு மேதா  பட்கர் உச்சநீதி மன்றத்தில் வாதாட, பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடும் குடியேற்றமும் தராமல்  அணை கட்டுவதற்குத்   தடை விதித்தது நீதிமன்றம். பின்னர், இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற அரசின் விளக்கத்துக்குப்பின்     1999 ம் ஆண்டு 88 மீ உயரமாக்கவும்  பிறகு 2000ம் ஆண்டு 90 மீ உயர்த்திக்கொள்ளவும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வேலை  2000ம் ஆண்டு ஆரம்பித்து 2006 ஆம் ஆண்டு முடிந்தது. 2014ம் ஆண்டு முடிவாக 163 மீ ஆக இந்த அணை உயர்ந்து உள்ளது.




இதனால் பழங்குடியின மக்களும், கிராம மக்களும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 2017 மே 27 இல் அரசு வெளியிட்ட  அரசிதழில் 18,346 குடும்பங்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர் என்று கூறுகிறது. இந்த அணையினால் கடல் நீர் 40 கிமீ வரை உள்ளே கலந்து அதில் இருக்கும் உப்பு நீர் 10,000 ஹெக்டேர் விவசாய நிலங்களை அழித்து உள்ளது என 'நர்மதா பச்சாவ் அந்தோலன்' இயக்கம் கூறுகிறது. பல  அறிவியல் வல்லுனர்கள் தற்போது அணைளால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகள் அதிகம் எனவும், உயரத்தில் இருந்து விழும் நீரினால், நீர்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் மீத்தேன் வாயு உமிழ்வு ஏற்பட்டு  ‘பசுமை இல்ல விளைவு’ (Green House Effect)  நிகழும் எனவும் எச்சரிக்கின்றனர். இந்தக் காரணத்தினால்  கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 30 அணைகளை தகர்த்துள்ளனர். சர்தார் சரோவர் அணை மக்களுக்கு நல்லது விளைவிக்க 40,000 கோடி செலவில் 59 ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ளது. இதன் விலை பணம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களின் வாழ்விடமும் தான்.  அந்த விலைக்கான  விளைவு வருங்காலத்தில் தான் தெரியும்   !

சந்தோஷ் 

சார்ந்த செய்திகள்