Skip to main content

ஜெயலலிதாவை ஒன்னும் தெரியாத குழந்தையாக்கும் மீடியா!

Published on 21/11/2017 | Edited on 21/11/2017
ஜெயலலிதாவை ஒன்னும் தெரியாத குழந்தையாக்கும் மீடியா! 

இரும்பு மனுஷி. போல்டான பெண்மணி. ஐந்து மொழி அறிந்த அறிவாளி. அனைவரையும் அடக்கியாண்ட அரசி. தவறு செய்தவர்களை தூக்கியெறியும் துணிச்சல்காரர். பிரதமராக இருந்தாலும் அவருடைய இல்லத்தில்தான் சந்திக்க முடியும் என்றெல்லாம் ஜெயலலிதாவைப் பற்றி மீடியாக்கள் இப்போதுவரை வர்ணித்து வருகின்றன.

ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஏ ஒன் குற்றவாளி என்பதை வசதியாக தவிர்க்கிறார்கள்.

இந்நிலையில்தான், ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் குடியிருந்த சசிகலா கும்பலின் கொள்ளைகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடந்தது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.



சமீபத்தில் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்ட தலைப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.

போயஸ் இல்லத்தில் திடுக்..!

போயஸ் இல்லத்தில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின..!

சசி கும்பலின் தகிடுதத்தம் அம்பலம்..!



ஜெயலலிதா வசித்த வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியதைத்தான் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இப்படியாகத் தலைப்பு போடுகின்றன.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திவிட்டு, சசி கும்பலை மட்டுமே குறிவைத்து குற்றம்சொல்லும் வகையில் இந்தச் செய்திகள் இருக்கின்றன.

ஜெயலலிதாவின் வீட்டில் ஜெயலலிதா வசித்த அறையை இன்னமும் சோதனை நடத்தவில்லையாம். அதற்கு நீதிமன்ற அனுமதி கேட்டிருக்கிறார்களாம்.

ஏதோ, ஜெயலலிதா வீட்டில் அந்த ஒரு அறைதான் ஜெயலலிதாவுக்கு சொந்தம் போலவும், மற்ற எல்லா அறைகளும் சசிகலா கும்பலுக்கு சொந்தமானவை போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதை கருத வேண்டும்.



போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், திரைமறைவில் நடந்த ஏராளமான முறைகேடுகள் பளிச்சென்று தெரிகிறதாம். பறிமுதல் செய்யப்பட்ட கடித மூட்டைகளில் பல்வேறு விவகாரமான தகவல்கள் இருக்கின்றனவாம்.

அடேங்கப்பா... என்னா ஒரு ஆச்சரியம். இதெல்லாம் இப்போதான் தெரிகின்றனவா? இதற்கு முன்னர் யாருமே இதைப்பற்றி பேசவே இல்லையா?

ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் என்று முன்பு ஒரு பட்டியல் வெளியானது. அதே பட்டியலையே இப்போது சசிகலா கும்பலின் சொத்துப் பட்டியலாக்கிக் காட்ட மிகப்பெரிய முயற்சி நடக்கிறது. இதை மீடியாக்களும், ஜெயலலிதாவின் முன்னாள் அடிமைகளும் மேற்கொண்டு இருக்கிறார்கள்.



ஆனால் உண்மை என்ன?

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடங்குவதற்கு முன்பு அவர்கள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை என்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டவை என்பது மீடியாக்களுக்கு தெரியாதா?

நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தனித்தோ, இணைந்தோ சொந்தமானவை என்பதை ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு மாநிலத்தையும், மிகப்பெரிய கட்சியையும் நிர்வாகம் செய்த ஜெயலலிதா, தனக்கு அருகே இருந்தவர்கள் அவருக்குத் தெரியாமல் செய்த தவறுகளை கண்டுபிடிக்க முடியாத முட்டாளாக இருந்தார் என்பதுபோல மீடியாக்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றன.



ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி சசி கும்பல் கொள்ளை அடித்ததாக செய்திகளை தயாரிக்கும் மீடியாக்களின் முயற்சி ஜெயலலிதாவை ஒன்னுமே தெரியாத பாப்பாவாக சித்தரிக்க உதவுமா தெரியவில்லை.

அதாவது, வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணத்தில் இருந்து, கொடநாடு எஸ்டேட் வாங்கியதில் இருந்து, கடைசியாக ஜாஸ் சினிமாவை வாங்கி விவேக்கிற்கு பரிசாக கொடுத்தது வரை ஒன்றுமே தெரியாதவராக ஆக்கிக்காட்ட முயற்சிக்கிறார்கள்.

மாநிலத்தில் ஜெயலலிதா வளர்த்த அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே, அவரிடம் மிகச் சிறந்த அடிமைகளாக நடித்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதே அவருடைய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது. இதைப்பற்றி மூச்சுக்கூட விடாமல் முதலமைச்சரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

சசிகலாவின் பினாமிகள் என்று பலரை மீடியாக்கள் சொல்கின்றன. ஆனால், சசிகலாவே ஜெயலலிதாவின் பினாமி என்பதை மறைக்கப் பார்க்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் எல்லோருமே ஜெயலலிதாவின் கொள்ளையில் பங்குபோட்டவர்கள் என்றே கடந்த காலம் நிரூபித்திருக்கிறது.



எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை வீட்டுச் சிறையில் வைத்து, கொள்ளையடித்த பணத்தை வசூலித்ததாக செய்திகள் வந்ததை இந்த மீடியாக்கள் எப்படி மறைக்க முடியும்?

1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆயிரம் ஜோடி செருப்புகள், தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல்கள், சொத்துப் பத்திரங்கள், பட்டுப்புடவைகள், விவகாரமான பொருட்கள் என்று நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டதை மீடியாக்கள் மறைக்க முடியுமா?

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்