Skip to main content

இன்று எல்லோரும் காதலையே பாடுகிறார்கள்! - கவிஞர் மதிபாலா நூல் வெளியீட்டு விழாவில் ஆதங்கக் குரல்

Published on 11/02/2020 | Edited on 11/02/2020
b


விஞர் இரா.மதிபாலாவின் ’அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்’என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, திருவான்மியூர் பனுவல் அரங்கில் அமர்க்களமாய் அரங்கேறியது. நிகழ்ச்சியை கவிஞர் அனுராதா இனிமையாகத் தொகுத்து வழங்க,  தேநீர் பதிப்பகத்தின் சார்பில் எழுத்தாளர் கோகிலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

b


விழாவிற்கு ஆரூர் தமிழ்நாடன் தலைமை தாங்க, கவிதை நூலை கவிஞர் மானா.பாஸ்கரன் வெளியிட்டார். நூலின் சிறப்புப் படியை கவிஞர் வதிலை பிரபா பெற்றுக்கொண்டார். கவிஞர்  நூலை அறிமுகப்படுத்திப் பேசிய கவிஞர் சுசித்ரா மாரன் “மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் இருக்கும் அகம் சார்ந்த உணர்வுகள், மதிபாலாவின் எல்லாக் கவிதைகளிலும் அடிநாதமாக ஒலிக்கிறது. பெரும்பாலான கவிதைகளில் கவிஞரின் இளம் எண்ணங்கள் ததும்புகின்றன” என்று நூல் குறித்த  ஆர்வத்தை ஏற்படுத்தினார். 

 

b


தலைமை உரையாற்றிய ஆரூர் தமிழ்நாடன் ‘உடலை சிறந்த உணவுகள் மூலம்  நாம் வளர்த்துக் கொள்வது போல், நாம் நம் உள்ளத்தை சிறந்த நூல்கள் மூலம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆழமான மனதில் இருந்துதான் உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்,. அந்த வகையில் மனதின் ஆழத்தை ஆழப்படுத்தும் ஆழமான கவிதைகளை கவிஞர் மதிபாலா எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.  நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய மானா.பாஸ்கரன், ‘தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல், வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. கவிஞர் மதிபாலா அன்பானவர். அந்த அன்பே அவரது எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. உவமைக்கவிஞர் சுரதாவைப் போல், கவிஞர் மதிபாலா, உருவக்கவிஞர் என்று பாராட்டும் வகையில், தன் கவிதைகளில் உருவகத் திருவிழாவையே நடத்தியிருக்கிறார்” என்று பாராட்டினார்.

 

b


நூலின் முதல படியைப் பெற்றுக்கொண்ட கவிஞர் வதிலை பிரபா “தலைமைச் செயலகத்தில் பணியாற்றியபடியே தமிழ்ப் பணி ஆற்றியவர் மதிபாலா. அவரது கவிதைகள் சிறப்பானவை. தமிழ் கவிதை உலகம் எப்படி வானம்பாடி இயக்கத்தை மறந்துவிட முடியாதோ, அதேபோல் இன்று தலைமைச் செயலகத் தமிழ்மன்றமும் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்து வருகிறது. மதிபாலாவின் மிகச்சிறந்த கவிதையாக அவரது புன்னகை அவர் முகத்தில் எப்போதும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது’ என்றார் உற்சாகமாக.

 

b


விழாவில் திடீர் விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘இன்று,  சிறந்த கவிதை நூல்கள் அதிகம் வெளிவருவதும், அவை சிறந்த வடிவமைப்பில்  நம் கைகளில்  தவழ்வதும், கவிதையுலகம் செழிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கவிதையும் பாடல்களும் மக்களின் வாழ்வைப் பேசவேண்டும். இதுவரை தமிழில் வெளியான திரைப்பாடல்களில், 90 சதப் பாடல்கள் காதலைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இன்று எல்லோரும் வெறும் காதலையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் ஏனைய பகுதிகளையும், மக்களின் உணர்வையும், தகிக்கும் பிரச்சினைகளையும் சொல்லும் பாடல்கள் இங்கே குறைவு. இந்த நிலை மாறவேண்டும்’ என்று சுட்டிக்காட்டியதோடு, நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, தனது பெண்ணியக் கவிதைகள் சிலவற்றையும் எடுத்துவைத்து, அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்.

 

மேலும், கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி, வணவை துரிகா, துபாய் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சுகம் முருகேசன், இளம்பரிதி பார்த்தி, மு.எ.பிரபாகரன், போல்ஸ்விக், ப.தேவபிரான், கு.விநாயகமூர்த்தி, கவிதா சரவணன், வை. இளம்வழுதி, இரா.கவியரசு ஆகியோரும்  கவிதை நூலைப் பாராட்டி, கவிஞரை வாழ்த்தினர். நிறைவாக கவிஞர் மதிபாலா, உணர்ச்சி பொங்க ஏற்புரையாற்றினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.