leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்டஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisment

கடந்த ஒரு மாதத்திற்குமுன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள்,20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று வந்தது. அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

Advertisment

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Advertisment