மைசூர் பாகிற்கும்
போட்டி
போடும் கர்நாடகா!!!
மதுர மல்லி, பத்தமட பாய், தஞ்சாவூர் வீணை மேலும் பலவற்றுக்கு புவிசார் குறியீடு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சுலபமாகக் கிடைத்த புவிசார் குறியீடு மைசூர் பாகுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அதற்கும் நம்முடன் போட்டி போடுவது கர்நாடகா. 'மைசூர் பாகு எங்களுக்குத் தான் சொந்தம்'னு கர்நாடகா சொல்ல, 'அட அதல்லாம் இல்ல, மைசூர் உன்னோடதா இருக்கலாம், பாகு எங்களுது'னு தமிழ்நாடு சொல்ல, சமூக வலைத்ததளத்தில் அனல் பறக்கும் விவாதம் போய்ட்ருக்கு. இங்க இப்படின்னா, இதே மாதிரி ஒரு பிரச்சனை ஒடிசாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையில ரசகுல்லாவுக்காக சமீபத்தில் நடந்தது . ஒடிசா, 'எங்களுக்கு தான் ரசகுல்லா சொந்தம்'னு சொல்ல மேற்கு வங்கம் எங்களுக்குனு சொல்ல கடைசியில ரசகுல்லாவிற்கு மேற்குவங்கம் புவிசார் குறியீடு பெற்று வெற்றிகண்டது.

புவிசார் குறியீடு பெறுவது என்பது அந்த ஊரின் பாரம்பரியமாகக் கருதப்படும் பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்களை பதிவு செய்து, உலக அளவில் அதன் பெருமை பரவவும், அதே பெயரில் ஊரின் பெருமையை பயன்படுத்தி தவறான முறையில் விற்பனை செய்து ஏமாற்றுவதைத் தடுக்கவும் பயன்படுகிறது. அந்த வகையில் மைசூர் பாகும் தமிழகத்தில் தான் முதலில் தயாரிக்கப்பட்டதாக உரிமைக்கோரி புவிசார் குறியீடு கோரப்பட்டது. அதற்கு ஆதாரமென்று கூறி, பிரிட்டிஷ் அதிகாரி "லார்ட் மெகாலே" எழுதிய கடிதம் என்று ஒன்றை சமூக வலைத்தளத்தில் தமிழர்கள் பரப்பி வருகின்றனர். பிப்ரவரி 2ஆம் தேதி 1835 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு இவர் அனுப்பியதாகக் கூறியுள்ளனர். அந்தக் கடிதத்தில் 'சுவைமிக்க மைசூர் பாகு இனிப்பை மதராஸில் உள்ள தமிழர்கள் தான் தயாரித்துள்ளனர் என்ற விஷயத்தை பெங்களூர் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். ஆனால் இந்த மைசூர் பாகு பற்றி 74 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸிலிருந்து ஒருவர் இந்த இனிப்பு வகையின் வழிமுறை அறிந்து மைசூர் மஹாராஜாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மைசூர் அரசு தந்திரமாகவும் நியாயமற்ற முறையிலும் இதற்கு 'மைசூர் பாகு' என்று பெயரிட்டுள்ளது என்றுள்ளது. ஆனால், உண்மையில் அந்தக் கடிதம் நம் இணைய சேட்டையர்களின் 'ஃபோட்டோஷாப்' வேலை. மெக்காலே, இந்தியர்களின் கல்வி பற்றியும் வாழ்வுமுறை பற்றியும் எழுதிய கடிதத்தை, இவர்கள் மைசூர் பாக் பற்றி எழுதியதாக மாற்றியுள்ளனர். 'மீம்'காரர்கள் கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ?

இணைய சேட்டையர்களின் கடிதம்
ஆனால் இந்த ஆதாரத்தை கன்னடர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அவர்களின் ஆதாரமாக ஒன்றை முன் வைக்கின்றனர். 'இதன் பிறப்பிடம் மைசூர் அரண்மனையில் உள்ள சமையலறை தான். நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஆட்சிக்காலத்தில் சமையல் ஊழியராக இருந்த ககசுர மாதப்பா என்பவர் தான் கடலை மாவுடன் சக்கரை நெய் கலந்து பாகுவை தயாரித்தார். அவர் தான் அதற்கு மைசூர் பாகு என்று பெயர் வைத்தார்' என்று அவர்கள் கூற, சமூகவலை தளத்தில் ஆதாரங்களை இருவரும் முன்வைத்து வருகின்றனர். நம்மிடமிருந்து இந்த உரிமையையும் பறிப்பதா என்ற கேள்வி வருகிறது. மேற்கு வங்கம் வென்றது போல தமிழகம் இதில் வென்று புவி சார்குறியீடு வாங்குமா?
பின் குறிப்பு : புவிசார் குறியீடு வழங்கும் மையம் தமிழகத்தில் சென்னையில் தான் உள்ளது. இந்தியா முழுவதும் புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு இங்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.
ஹரிஹரசுதன்