Skip to main content

ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து

Published on 18/11/2017 | Edited on 18/11/2017
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை அதிமுக தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெ. இல்லத்தில் நடந்த ரெய்டு குறித்து ஆளும் அதிமுக அரசில் ஓ.பி.எஸ். அணியில் உள்ள மேட்டூர் எம்எல்ஏ செம்மலையின் கருத்தைக் கேட்க தொடர்பு கொண்டபோது...

வருமான வரித்துறைக்கு புகார் வருகிற பட்சத்தில் அல்லது வரி ஏய்ப்பு தகவல் வருகிற இடங்களில் அவர்கள் சோதனை செய்தது அவர்களுடைய கடமை. 21 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்தது. அரசியல் காரணங்களுக்காக என்று எங்களால் பேசப்பட்டது. இப்போது நடந்த சோதனை அம்மா வீடு என்று எண்ணுகிறபோது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் ஏற்கனவே பல இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளின் தொடர்ச்சியாகக்கூட இருக்கலாம். 

பாரத பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது பஞ்சாப் பொற்கோவிலில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்று தகவல் அறிந்து ராணுவத்தை அனுப்பி ஆப்ரேசன் புளு ஸ்டார் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை எல்லாம் சுட்டுக்கொன்று ஆயுதங்களை கைப்பற்றி தீவிரவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இந்திரா காந்தி நடவடிக்கையை பாராட்டியவர்களும் உண்டு. கண்டித்தவர்களும் உண்டு. 

அதைப்போல இந்த வருமான வரித்துறை சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். அதே நேரத்தில் அரசியல் காரணமாக இருந்துவிடக் கூடாது. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியும். விசாரணை அறிக்கைக்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்று முடித்துக்கொண்டார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்