Skip to main content

நிர்மலா சீதாராமனுக்கு சீன ராணுவம் பயந்துருமா?

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சரானால் சீனா பயந்துருமா? 

மோடி தனது அமைச்சரவையை மாற்றி அமைத்ததை பெரிய சாதனைபோல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் இதுபோன்ற அமைச்சரவை மாற்றங்களுக்கு பல காரணங்கள் இருக்கும்.

செல்வாக்கு சரியும் மாநிலங்களில் பெரும்பான்மை சாதிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். சமீப காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராகவே பொதுமக்கள் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் அருணாச்சலப் பிரதேசத்தை அடுத்து, சிக்கிமிலும் சீனா அத்துமீறி இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

பாகிஸ்தானும் சீனாவும் எல்லையில் நடத்தும் அத்துமீறல்களை இந்திய ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை. சீனாவை வன்மையாக கண்டிக்கக்கூட பிரதமர் மோடி முன்வரவில்லை.

பொருளாதார வளர்ச்சி மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 10 மாதங்கள் ஆன நிலையில் கருப்புப்பணமும் மீட்கப்படவில்லை. பொருளாதாரமும் சீராகவில்லை. 99 சதவீத பழைய நோட்டுகள் திரும்ப வந்துள்ளதாக நிதியமைச்சரே சொல்கிறார். அப்படியானால் கருப்புப்பணமே மீட்கப்படவில்லையா? கருப்பை வெள்ளையாக்கத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியதா என்று பொருளாதார நிபுணர்கள் கேலி பேசுகிறார்கள்.



மோடி சொன்ன புதிய இந்தியா எங்கே என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அதுதான் அப்படியென்றால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமுலானால் கருப்புப்பணம் ஒழியும் என்றார். விலைவாசிதான் அதிகமாகி இருக்கிறது. கருப்புப்பணம் எப்படி ஒழியும் என்பதற்கு சாத்தியக்கூறுகளையும் காண முடியவில்லை.

இரண்டு முக்கியமான முடிவுகளை அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறக்கும் என்று மோடி சொன்னார். ஆனால், இருக்கிற இந்தியாவை நோஞ்சானாக்கவே அவருடைய அறிவிப்புகள் உதவியிருக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சரவையில் முதிய கட்சிக்காரர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கும்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் ராஜஸ்தானில் செல்வாக்கு சரிந்துவரும் ராஜபுத்திரர்கள் மத்தியில் செல்வாக்கை தூக்கி நிறுத்த அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு இணையமைச்சர் பதவிகள் தரப்பட்டிருப்பதாக வெளிப்படையாகவே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ அமைச்சர் பதவி கொடுத்ததை பெரிய சாதனையாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்திராவுக்கு அடுத்து இரண்டாவது பெண் அமைச்சர் ராணுவத்துக்கு பொறுப்பேற்றிருப்பதாக பெருமை பேசுகிறார்கள்.

ஆனால், மிகக்குறைந்த ராணுவ பலத்துடன் இருந்த காலகட்டத்தில் ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த இந்திரா பக்கத்து நாடுகளுடன் எப்படி உறவு வைத்திருந்தார். இந்தியாவை பார்த்து பக்கத்து நாடுகள் எப்படி பயந்தன என்பதை ஒருமுறை பின்னோக்கிப் பார்த்தால், மோடியின் மூன்றாண்டுகளில் வெற்றுப் பெருமை மட்டுமே பேசி வந்தது புரியும்.

நிர்மலா சீதாராமன் மக்கள் வாக்குகளைப் பெற்று அமைச்சராகவில்லை. ஆந்திராவில் அவருடைய மாமனார் குடும்பம் காங்கிரசில் செல்வாக்கு மிக்கது. மாமனார் பரக்கல சேஷவத ராம் மாநில அமைச்சராக இருந்தவர். அவருடைய மாமியார் எம்எல்ஏவாக இருந்தவர்.

அந்தக் குடும்பத்திலிருந்து வந்த நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை உறுப்பினராக  ஆந்திராவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி இருக்கிறார்.



ஆந்திரா மருமகள் என்று அந்த மாநில பாஜகவை திருப்திபடுத்தவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தமிழகத்தை திருப்திப்படுத்தவும் நிர்மலாவை பயன்படுத்துகிறது பாஜ்க.

ஆனால், மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று ஜெயிக்க முடியாத ஒருவரை அகில இந்திய அளவில் தனது உயிரைப் பணயம் வைத்து ஒருமைப்பாட்டுக்காக போராடிய இந்திராவுடன் ஒப்பிடுவது எந்தவகையில் நியாயமோ தெரியவில்லை.

என்னவோ இவர் ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் பாகிஸ்தானும், சீனாவும் பயந்து நடுங்கப்போவதைப் போல ஒரு பில்டப் கொடுக்கிறார்கள். அதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

ஹும் என்ன செய்வது? மோடி அரசாங்கமே பில்டப்பில்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்