/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/4_327.jpg)
பெரியார் பல்கலைக்கழகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.
இம்மெர்சிவ் தொழில்நுட்பம் சார்ந்த இரு பட்டப்படிப்புகளை நடத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரியார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் விருப்பம் கோரியிருந்தது. அப்போதே இப்பாடப்பிரிவுகளை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்த நான், இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு இப்போது மாணவர் சேர்க்கை வரை வந்திருக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த படிப்புகளை நடத்துவது இரு வகைகளில் சட்ட விரோதமும், ஒரு வகையில் சமூக அநீதியும் ஆகும். முதலாவதாக, கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகமான பெரியார் பல்கலைக்கழகத்தால் இத்தகைய தொழில்நுட்பப் படிப்புகளை நடத்த முடியாது; இரண்டாவதாக பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை நடத்த இயலாது. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் தனியார் நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை நடத்த அனுமதிப்பதும், அதற்கான மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதும் மாணவர்களை சுரண்டும் செயலாகும்.
இதற்கு முன் 2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது. அதற்கு விடையளித்த அன்றைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இத்தகைய பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியதுடன், அப்படிப்பைக் கைவிடவும் செய்தார்.
இம்மெர்சிவ் தொழில்நுட்பம் படிப்பை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்று இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதே படிப்பை நடத்த இப்போது அரசு அனுமதிப்பது எப்படி? ஒருபுறம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீது விதிமீறல் வழக்கு, ஊழல் வழக்கு என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் தமிழக அரசு, இன்னொருபுறம் இத்தகைய சட்டவிரோத செயல்களை எவ்வாறு அனுமதிக்கிறது? இந்த வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, புதியப் படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய அநீதியான முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஸ்கோபிக் எஜுடெக், மோனோலித், யுனிட்டோஸ், ஹெலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஏராளமான படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் படிப்புகளுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் படிப்புகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சுரண்டல். இதை அரசு அனுமதிக்கக்கூடாது.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மோனோலித் என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம் பி.டெக்/பி.எஸ்.சி கிரியேட்டிவ் மீடியா டெக் ஆகிய படிப்புகளை நடத்தி வருகிறது. இதற்காக மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்த நிலையில், இந்தப் படிப்புகளுக்கான சான்றிதழ் செல்லுமா? வேலை கிடைக்குமா? என்பது தெரியாமல் மாணவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நிலை இம்மெர்சிவ் தொழில்நுட்பம் பயிலவிருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.
எனவே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பெரியார் பல்கலைக்கழகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்தும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று தமிழக அரசும், ஏ.ஐ.சி.டி.இ அமைப்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)