
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக 6வது சைவ சிந்தாந்தா மாநாடு இன்று (03-05-25) மாநாடு நடைபெற்றது. இன்று தொடங்கிய இந்த மாநாடு மே 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தருமபுரம் ஆதினம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டு நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பாரிவேந்தர், பா.ஜ.க தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு. ஆன்மீகம் மட்டுமின்றி சமூக சேவையிலும் தருமபுரம் ஆதினம் ஈடுபட்டு வருவது பாராட்டுத்தக்கது. தேவாரம், திருவாசகம் ஆகியவை தற்போதும் உணர்வுப்பூர்வமாக பாடப்படுகிறது. சைவ சித்தாந்தம் மனித நேயத்துக்கு சேவைக்கு அடையாளமாக இருக்கிறது” என்று பேசினார்.
முன்னதாக, அனைத்துலக 6வது சைவ சிந்தாந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஆன்மீகம், சிந்தாந்தம், பண்பாடு குறித்து இளைய தலைமுறையினர் அறிவதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் எனத் தெரிவித்தார். மேலும் அவர், சைவ சிந்தாந்தம் தமிழ்நாட்டில் தான் உச்சநிலையை அடைந்ததாகவும், தமிழ் பண்பாட்டில் சைவ சிந்தாந்தம் ஒரு அணிகலனாக இருந்து வருகிறது என்று புகழாரம் சூட்டினார்.