Skip to main content

சிசுக்களின் உயிர்! தனியார் மருத்துவமனைகளின் தரம்!

Published on 21/11/2017 | Edited on 21/11/2017
சிசுக்களின் உயிர்! தனியார் மருத்துவமனைகளின் தரம்!

மக்களுக்கு தரமான மருத்துவத்தை அளிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது.  இந்த சேவைக்காகவே, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் உருவாயின. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 37 மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் 303 மருத்துவமனைகள் மற்றும் ஆயிரக்கணக்கில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் குறித்த புள்ளிவிபரம் இது –

கடந்த ஆண்டில் மருத்துவக் கல்வி இயக்கக மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 82 லட்சத்து 82 ஆயிரத்து 153. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 25 ஆயிரத்து 942.

அரசு மருத்துவமனை தந்த அதிர்ச்சி!

’சுத்தமாக இல்லை; மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்; அவசரகதியில் அக்கறையில்லாமல் செயல்படுகிறார்கள்; லஞ்சம் கொடுக்க வேண்டியது இருக்கிறது’ என்பது போன்ற புகார்கள் பரவலாக இருந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் புகலிடமாக அரசு மருத்துவமனைகள் விளங்குகின்றன.

“அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில், குழந்தைகளின் இறப்பு சதவீதம் என்பது ஆண்டுக்கு ஆண்டு குறைந்தே வருகின்றன..” என்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.  ஆனாலும், 2014-இல் தர்மபுரி அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாத நிலையில், பச்சிளம் குழந்தைகள் வார்டில் அடுத்தடுத்து 12 குழந்தைகள் இறந்துபோனது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாவட்ட அளவில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் மட்டுமே NICU (Neonatal intensive care unit) எனப்படும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்குகிறது. மற்ற அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில், போதிய  உபகரணங்களோ, முழுமையான வசதிகளோ இல்லாத நிலையே காணப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளிலும் நம்பிக்கை மோசடி!

பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவிக்கும் குழந்தை அல்லவா? அதனால், பொருளாதார வசதி இல்லாதவர்களும் கூட,  ‘ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்?’ என்று, கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர்.  குழந்தைகளுக்கான சிகிச்சையும் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும்,  தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமானது என்றே மக்கள் நம்புகின்றனர்.

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக தனியார் மருத்துவமனைகள் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா? ‘நம்பினோம்; ஏமாந்தோம்; உயிரைப் பறிகொடுத்துவிட்டோம்.’ என்பது போன்ற புலம்பல்கள் இப்போதெல்லாம் அதிகமாகவே கேட்கின்றன. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.  தனக்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவத்தைச் சொல்கிறார் ஷாலினி-  

“நான் ஒரு ஸ்டாஃப் நர்ஸ். தனியார் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு.

கர்ப்பம், பிரசவத்தின் போது டாக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்,  அதற்கான சிகிச்சை முறைகள்  போன்றவற்றை நன்கு அறிவேன்.  எனது முதல் பிரசவத்தின் போது,  நான் பிறந்த ஊரான சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் விதிமீறலாக நடந்துகொண்டனர். பணம் கறப்பதில் இருந்த அக்கறையை சிகிச்சை அளித்தபோது காட்டவில்லை. தகுதியும்,  போதிய அனுபவமும் இல்லாத செவிலியர்களே அங்கு இருந்தனர். இத்தனைக்கும் என் குழந்தை குறைமாதத்தில் பிறக்கவில்லை. முறையான, சரியான சிகிச்சை அளிக்காததால், நான் பத்து மாதங்கள் சுமந்த மகள்,  ஏழாவது நாளிலே உயிரைவிட நேர்ந்தது.” என்றார் குமுறலுடன்.

அவரது கணவர் மகேந்திரகுமார் நம்மிடம் “அந்த தனியார் மருத்துவமனையில் இயங்கும் NICU-வில்  (பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு) போதிய வசதிகள் இல்லை. சிகிச்சை முறைகளும் தவறானவை. ஆதாரங்களுடன் சொல்கிறேன். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 குழந்தைகள் இறந்துவிட்டன.  உயிரிழப்புக்கள் தொடர்வது வாடிக்கையாக இருந்தும்,  NICU-வில் சிகிச்சை அளிப்பதற்கு அந்த மருத்துவமனை நாள் ஒன்றுக்கு வாடகையாக மட்டும் ரூ.7500 கட்டணம் வசூலிக்கிறது. மருந்து செலவுகள் தனி.  பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலேயே NICU கட்டணம் ரூ.5000 தான். சிகிச்சை என்ற பெயரில்,  என்னிடம் ரூ.68000 வரை பிடுங்கிக்கொண்டு, கூட்டுச்சதி செய்து என் குழந்தையைக் கொன்றுவிட்டனர்.” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

சிகிச்சை என்ற பெயரில் ஏதேதோ நடந்தது!

கணவனும் மனைவியும் தங்கள் குழந்தை உயிரிழப்பின் பின்னணியை விவரித்தனர்.



“கடந்த 25-10-2017 அன்று சிவகாசியில் உள்ள ஞானதுரை மருத்துவமனையில் இரவு 8-20 மணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஷாலினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் வயிறு வீங்கி இருந்தது. உடனே, உள்ளூரில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ள அருணா குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தையை அட்மிட் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது அந்த மருத்துவமனை.  அங்கு, குழந்தையிடமிருந்து  முறையாகக் கழிவுகளை வெளியேறவிடாமல் செய்த,    குடலில் உள்ள துவாரத்தை அறுவை சிகிச்சை மூலம் அடைத்துச் சரி செய்தனர்.  அதனால், குழந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும், மருந்து மற்றும் குழந்தைக்கான உணவை ட்யூப் மூலம் செலுத்துவதற்கு,  சென்ட்ரல் லைன் போட வேண்டியிருந்தது.

இது சாதாரணமான ஒன்றுதான். போதிய பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் அந்த மருத்துவமனையில் இல்லாததால்,  சென்ட்ரல் லைன் போடும் சாதாரண ஒரு விஷயத்துக்கு,  குழந்தைகள் நல மருத்துவர் இருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மயக்கவியல் நிபுணர் ஒருவர், செவிலியர் நால்வர் என 8 பேர் கொண்ட ஒரு குழுவே குழந்தையைச் சூழ்ந்து கொண்டு,  ஏதேதோ பண்ணிவிட்டார்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளத்தை அறுத்துவிட்டார்களோ என்னவோ? குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துபோனது. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராமநாதன் ‘சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு, நூற்றில் ஒரு குழந்தை இப்படி இறந்து போவது உண்டு’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார். இறந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியைக் கூட அந்த மருத்துவமனை செய்து தரவில்லை.  டூ வீலரில் கையில் ஏந்தியபடியே குழந்தையின் உடலை எடுத்துச் சென்றோம்.



உயிரோடு இருந்தபோது குழந்தையை வேறு சிறந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. குழந்தைகளுக்கான மருத்துவத்தை அறிந்திருக்கும் எங்களிடமே, அந்த மருத்துவமனை மோசடி செய்துவிட்டது.  சாதாரண மக்களுக்கு மருத்துவம் குறித்து என்ன தெரியும்? அவர்களையெல்லாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியுமே? எத்தனை பெற்றோரை எப்படியெல்லாம் ஏமாற்றினார்களோ? எத்தனை உயிர்களைப் பறித்தார்களோ? இதையெல்லாம் நினைத்து எங்களால் தூங்க முடியவில்லை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தைச் சந்தித்து,  அந்த மருத்துவமனை குறித்தும்,  மருத்துவர்கள் குறித்தும் புகார் அளித்திருக்கிறோம். ‘அரசு மருத்துவமனையில்தான் அத்தனை வசதிகளும் இருக்கின்றனவே? ஏன் செல்லவில்லை?’ என்று கேட்ட மாவட்ட ஆட்சியர், உரிய  விசாரணை நடத்தி,  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.” என்றனர் பரிதவிப்புடன்.

அத்தனை குழந்தைகளையும் காப்பாற்றிவிட முடியாது!

அருணா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராமநாதனை சந்தித்தோம்.

“தகுதியும் அனுபவமும் வாய்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும்தான் இங்கு சேவையாற்றுகிறார்கள்.  மிகவும் சீரியஸான நிலையில் உள்ள குழந்தைகளைத்தான் இங்கு கொண்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் எங்கள் மருத்துவமனை,  ஆபத்தான கட்டத்தில் வரும் குழந்தைகளுக்கு  உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி வருகிறது.  இதுபோன்ற குழந்தைகளில்  நூற்றுக்கு 60 சதவீதம்.. இல்லை இல்லை.. 80 சதவீதம் குழந்தைகளையே காப்பாற்ற முடிகிறது. ஷாலினியின் குழந்தைக்கு,  பிறக்கும்போது, கர்ப்பத்திலேயே,  சிறு குடலில் ஓட்டை விழுந்திருந்தது. பிரசவத்தின்போது, சிரமப்பட்டு பிறந்து, இங்கு கொண்டுவரும்போது மூச்சுத் திணறல் இருந்தது. இந்த மாதிரி குழந்தைகள் பிழைப்பதே அபூர்வம்.   ஷாலினியின் குடும்பத்தினர் மருத்துவ விபரம் அறிந்தவர்கள் என்பதால், சிகிச்சையின் போது, எல்லா விபரங்களையும் எடுத்துச் சொன்னோம். அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகே, சிகிச்சை அளித்தோம்.

அதற்கான சிசிடிவி ஃபுட்டேஜ் எங்களிடம் இருக்கிறது.  சிகிச்சை அளித்ததில் எந்தக் குறையும் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை செப்டிசிமியாவுக்கு போய்விட்டதால், கை, கால்கள் விரைத்துவிட்டன. 5-வது நாளில் சென்ட்ரல் லைன் போடுவதற்கு நரம்பே கிடைக்கவில்லை. கார்டியாக் அரெஸ்ட் ஆனதால், கடைசி வரை சென்ட்ரல் லைன் போட முடியவில்லை. அப்போது சிகிச்சை அளித்த  மயக்கவியல் டாக்டர் கிஷோரும், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்குமாரும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்.   குழந்தை இறந்துபோனதால், இஷ்டத்துக்கு பேசுகிறார்கள். எங்களை மிரட்டவும் செய்கிறார்கள். சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்கள் முழுவதுமாக செலுத்தவில்லை.  

மெர்ஸல் திரைப் படத்தில் டாக்டர்களையும் மருத்துவமனைகளையும் தவறாகச் சித்தரித்திருந்தார்கள். உயிரைக் காப்பாற்றுவதற்கு இரவு, பகல் பாராது பணியாற்றும் மருத்துவர்களைக் கொச்சைப்படுத்தி இருந்தார்கள்.  அந்த சினிமா ஏற்படுத்திய மன உளைச்சலால்,  இரண்டு, மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. இப்போது, அநியாயமாக எங்கள் மீது பழி சுமத்தி, மிக மோசமான ஒரு குற்றச்சாட்டைக் கூறுகிறது ஷாலினி குடும்பம்.” என்றார் வேதனையோடு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மருத்துவ சுகாதாரக் குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில், ‘சிகிச்சை சரியானதா? தவறானதா?’ என்ற உண்மை தெரிந்துவிடும்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்