Skip to main content

மீண்டும் மத்தியில் கூட்டணி அரசு!

Published on 22/12/2017 | Edited on 22/12/2017
மீண்டும் மத்தியில் கூட்டணி அரசு 
- பிரான்ஸ் அரசியல் அறிஞர் கணிப்பு! 

குஜராத்தில் பாஜக கிராமப்புறங்களிலும், காங்கிரஸ் நகர்ப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்கிறார் பிரான்சைச்  சேர்ந்த அரசியல் விஞ்ஞானி கிறிஸ்டோப் ஜாபர்.

இதற்கு முன்னும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற வாக்குகள் பிரிந்தது உண்டு. குறிப்பாக சவுராஸ்டிரா பகுதியில் இந்த பிரிவு அதிகமாக இருக்கும். முதல்தடவையாக கிராமப்புற மக்கள் மோடியை கைவிட்டிருக்கிறார்கள்.



படேல் வகுப்பினர் காங்கிரஸை ஆதரித்ததால் மற்ற சாதியினர் பாஜகவை ஆதரித்ததாக சொல்ல முடியாது. குறிப்பாக காங்கிரஸை தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஆதரித்தார்கள்.  காங்கிரஸிலிருந்து கடைசி நேரத்தில் பாஜகவுக்கு வந்தவர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பட்டேல் வகுப்பினரைக் காட்டிலும் கூடுதலாக காங்கிரஸில் பிற்படுத்தப்பட்டோருக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன.

குறிப்பாக மோடியின் குஜராத் மாடல்தான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம். குஜராத் மாடலில் பொருளாதாரம் சுமாராக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதானியும், அம்பானியும், டாட்டாவும் குஜராத்தில் தொழிற்சாலைகளைக் கட்டினார்கள். ஆனால், அவற்றின்மூலமாக வேலைகள் உருவாக்கப்படவில்லை. பெரிய தொழிற்சாலைகளுக்குப் பதிலாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை உருவாக்கியிருந்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

பாஜக 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தும் வெற்றி பெற்றிருப்பது சாதனை என்று சொல்ல முடியாது. எத்தனை வாக்குகள் பெற்றிருக்கிறது என்பதும் மேட்டர் கிடையாது. வெறும் 31 சதவீத வாக்குகளை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது பாஜக. வெறும் நகர்ப்புற கட்சியாக பாஜக குஜராத்தை ஆள முடியுமா?

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகிய மிகப்பெரிய பிரச்சனைகளை மோடி தந்திரமாக திருப்பினார். நான் குஜராத்தின் மகன், ராகுல் காந்தி வெளியில் இருந்து வருபவர், பாகிஸ்தானுடன் சேர்ந்து மன்மோகன் சிங் சதி, நான் கோவிலுக்காக நிற்கிறேன், காங்கிரஸ் மசூதிக்காக நிற்கிறது என்றெல்லாம் பேசி மக்களை திசை திருப்பினார்.



மோடியின் பிரச்சாரத்தை அடித்து நொறுக்கும் வகையில் ராகுல் காந்தி கோவில்களுக்கு பயணம் செய்தார். ஆர்எஸ்எஸ் ஆளான சங்கர்சிங் வகேலா கட்சியிலிருந்து வெளியேறும்படி செய்தார். முஸ்லிம்களை பற்றி பேசாமல் மென்மையான ஹிந்துத்துவாவை காங்கிரஸும் நடைமுறைப்படுத்தியது. 2019 மக்களவைத் தேர்தல் வரை காங்கிரஸ் இதே போக்கைத்தான் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இஸ்லாமியரை பகிரங்கமாக ஆதரிக்க முடியாத நிலையை பாஜக உருவாக்கி இருக்கிறது. இதுதான் இன்றைய எதார்த்த இந்தியாவாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தனது நிலையை வெளிப்படுத்தலாம்.

குஜராத்தில் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாற்றம் இந்தியாவில் மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது. காங்கிரஸுக்கு இப்போது தலைவர் கிடைத்திருக்கிறார். அதேசமயம், வரவிருக்கிற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸின் மாநில தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணமாக ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து செயல்படுவதைப் போல எல்லா மாநிலங்களிலும் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்கிறார் கிறிஸ்டோப்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்