Skip to main content

“எந்த சட்டப்பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார்” - உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Under which section of the Act is Senthil Balaji disqualified HC questions

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

இதற்கிடையே செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை  வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

 

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது. மேலும் ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகள் இருந்தால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்கள். அதே போன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர்கள் வாதத்தை முன்வைக்கையில், “ஒரு மாதத்திற்கும் மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்” என்ற வாதத்தை முன் வைத்தனர். மேலும் இந்த வழக்கில் ஜெயவர்தன் தரப்பு வாதத்தை முன் வைக்கையில்,“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தனர்.

 

இதனைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு, “2 ஆண்டுகளுக்கும் கீழ் தண்டனை பெற்றவர்கள் பதவியில் தொடரலாம் என்ற விதி உள்ளது. எனவே எந்த சட்டப்பிரிவின் கீழ்  அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார்” எனக்  கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு தனது தரப்பு வாதங்களை முன் வைப்பதற்காக அடுத்த வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்