/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-bus-art-chennai-central--background_0.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பழுதுபடுதல் (Breakdowns) குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளும், அதற்கு உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான பொதுப் போக்குவரத்தை, எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 20 ஆயிரத்து 260 பேருந்துகள் மூலம் 10 ஆயிரத்து 125 வழித்தடங்களில் இயக்கி வருகிறது. தினசரி 18 ஆயிரத்து 728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொது மக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர். இதில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணமில்லாமல் இயக்கப்படும் 7 ஆயிரத்து 179 பேருந்துகளின் மூலம் சுமார் 51.47 இலட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-ac-bus-art.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது. ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்படவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என 26-04-2024 தேதியில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து தற்போது அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.
கோவிட்-19 பெருந்துயர் காலமான 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலகட்டங்களில், போக்குவரத்துக் கழகங்களில் எந்த வருமானமும் இல்லாமல், அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தினால், புதிய பேருந்துகள் எதுவும் வாங்க இயலாத சூழல் இருந்தது. இதன் காரணமாக வயது முதிர்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகி, 31.12.2023-ன் படி, பேருந்துகளின் சராசரி வயது 9.13 வருடமாகவும், வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 582 ஆகவும், 52.73 சதவீதமாகவும் இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus-file-art_0.jpg)
அரசு கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-23 ல் 1000 புதிய பேருந்துகளும், 2023-24 ல் 1000 புதிய பேருந்துகளும், 2024-25 ல் 3000 பேருந்துகளும், எஸ்.ஏ.டி.பி. ( SADP) திட்டத்தின் கீழ் 16 பேருந்துகளும் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் (KfW) 2 ஆயிரத்து 666 புதிய பேருந்துகளும் என 7 ஆயிரத்து 682 மொத்தம் புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது வரையில் 652 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த பேருந்துகள் கழிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 ஆயிரத்து 30 பேருந்துகளும் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் அதே எண்ணிக்கையில் வயது முதிர்ந்த பேருந்துகள் கழிவு செய்யப்பட உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus-art_6.jpg)
மேலும், மொத்த செலவு ஒப்பந்த (GCC) அடிப்படையில் சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளின் கூண்டினை புதுப்பிக்க 2022-23 ல் 1000 பேருந்துகளும் 2023-24 ல் 500 பேருந்துகளும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதில் தனிக் கவனம் செலுத்தியதன் காரணமாக 2022-23-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-24 ல் 29 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. பொது மக்களுக்கு தட பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)