Skip to main content

நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகள் திறக்க த.வா.க எதிர்ப்பு!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
TASMAC_STORY


நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகள் திறக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் NH45வில் கிருமாம்பாக்கம் முள்ளோடை முதல் மதகடிபட்டு வரை இருந்த 18 மதுபானக்கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது.

அதையடுத்து சாராயக்கடை மற்றும் ஒயின்ஸ் பார் உரிமையாளர்கள் மாற்று இடத்திற்கு சென்றனர். இதனால் கடந்த பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் குறைந்தது. ஆனால் தற்போது நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கடை திறக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்ற மறு உத்தரவின்படி புதுவை நகராட்சிகளில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டது.
 

tvk


புதுச்சேரியில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் திறக்கப்படக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சிக்கு நிகராக அப்பகுதியில் அனைத்து வசதிகளும் உள்ளது என்று கூறி புதுச்சேரி சட்டத்துறை மூலமாக அனுமதி பெற்று மதுபானக்கடைகளை மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு புதுவை அரசு அனுமதி வழங்கினால் மேலும் விபத்துகள் அதிகரிக்கும். புதுச்சேரி அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி கலால் துறைக்கு பூட்டு போட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டத்துக்கு புறம்பாக 18 மதுபான கடைகளை திறப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்