
சென்னை அண்ணாநகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நான் தொண்டைக்கிழிய சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நம்பரையும் கொடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேப்பரையும் உங்களிடம் கொடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குற்றச்சாட்டை போட்டால் அது உண்மையான குற்றச்சாட்டு என்று உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை நீக்கி விடுங்கள்.
எந்த விதமான கார்ப்பரேட்டுக்கும் நாங்கள் வரிச்சலுகை செய்யவில்லை. அதனால் அதை திருப்ப திருப்ப சொன்னார்கள் என்றால் நான் என் தரப்பில் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் ஆதாரம் கொடுங்கள். ஏதாவது ஒரு ப்ரூப் கொடுங்கள் என்று அவர்களிடம் நீங்கள் கேளுங்கள். எந்த விதத்தில் எந்த கார்ப்பரேட்டுக்கு வரிச்சலுகை கொடுத்திருக்கிறோம் என நான் கேட்கிறேன். ஒரு பாலிசி மூலமாக தொழிற்சாலைகள் நம் நாட்டிற்கு வர வேண்டும்; முதலீடு வரவேண்டும் என செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கும் தான் முதலீடு வருகிறது. இங்கேயும் கார்ப்பரேட் வருகிறார்கள். இவர்கள் ஏதாவது கார்ப்பரேட்டுக்கு கொடுத்திருக்கிறார்களா? அதனால் தான் வருகிறதா? நாடு முழுவதும் கொள்கை சரியாக இருந்தால்; நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு இருந்தால்; நாடு முழுவதும் வரி கொள்கை எல்லோருக்கும் சாதகமாக இருந்தால் அந்தந்த தொழில்கள் வளரும். தமிழ்நாட்டில் சிறு குறு தொழில்கள் வளர்கிறது.
எனவே கார்ப்பரேட்டுக்கு மத்திய அரசு வரிச்சலுகை கொடுப்பதாக அடித்தளமே இல்லாமல் கொடுக்கும் குற்றச்சாட்டுகளை அவர்கள் சொன்னால் உங்களிடம் நான் உங்களிடம் விண்ணப்பித்து கேட்டுக்கொள்கிறேன் 'ஆதாரம் கொடுங்கள்' என கேளுங்கள். பிரதமர் மோடி கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்திருக்கிறார். உலக அளவில் அந்த துறைமுகத்தால் நம் நாட்டிற்கு பெருமை. ஆனால் இத்தனை நாட்களாக அதானி அதானி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இன்று அதானி மூலமாகத்தான் அந்த துறைமுகம் வந்திருக்கிறது. அதை அதானிக்கு கொடுத்தது காங்கிரஸ். அதனுடன் தோழமையில் இருக்கும் திமுக இங்கு ஆட்சியில் இருக்கிறது. இந்த கேள்வியை அங்கு கேளுங்கள். காங்கிரஸின் உம்மன்சாண்டி காலத்தில் அந்த ப்ராஜெக்ட்டை டெண்டரே இல்லாமல் அதானியை கூப்பிட்டு கையில் கொடுத்தார்கள். அப்படி செய்த காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கும் நிலையில், மத்திய அரசு கார்ப்பரேட்க்கு வரிச்சலுகை கொடுத்து விட்டார்கள் என சொல்கிறார்களே கேரளாவில் காங்கிரஸ் அதானிக்கு கொடுத்தது கார்ப்பரேட் இல்லையா அதை கேளுங்கள்'' என்றார்.