Skip to main content

கர்நாடகா எல்லையில் தவித்த தமிழர்கள்..! மீட்ட அதிகாரிகள் -நெகிழ்ச்சி சம்பவம்

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

 

கரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்க  இந்தியா முழுவதும் சென்ற 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தமிழக மக்களுக்குத் தமிழக அரசும் கூறியுள்ளது. 
 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் நேற்று மாலை  27 டிராவல்ஸ் வாகனங்களில் சுமார் 669 பேர் திடீரென வந்து இறங்கினார்கள். கர்நாடகா ஒட்டுனர்கள் 'நீங்கள் இனிமேல் நடந்து போய்க் கொள்ளுங்கள், தமிழ் நாட்டுக்குள் நாங்கள் வரமாட்டோம்' எனக் கூற, அந்த 669 பேரும் அதிர்ச்சியாகி 'எங்களை நிலப்பகுதியான சத்தியமங்கலம் வரை கொண்டு வந்து விடுவதாகத்தானே பேசினீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு ரோந்து வந்த தமிழ்நாட்டின் ஆசனூர் காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்தனர்.
 

Karnataka border


 

அப்போதுதான் தெரிந்தது அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் என்பது. இவர்கள் அனைவரும் ஒரு மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றதாகவும் தெரியவந்தது. 
 

கடந்த முப்பது வருடங்களாக இங்கு வந்து ஒப்பந்த அடிப்படையில் கர்நாடகா கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஒரு முறை மங்களூர் வந்தால் இரண்டு மூன்று மாதங்கள் கடலில் மீன் பிடித்து விட்டு பிறகு சொந்த ஊர் ராமேஸ்வரம் சென்று விட்டு சில நாட்கள் கழித்து திரும்ப வருவார்கள்.
 

கர்நாடகா கடலில் இருந்து மகாராஷ்ரா கடல் பகுதி வரை பல நாட்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்பி வருவார்கள். பிரதமர் மோடி ஊரடங்கு தடை உத்தரவு போட்ட நாளில் கடலுக்குள் இருந்துள்ளனர். பிறகு திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது. கடலிலிருந்து திரும்பி வந்தவர்களை நீங்கள் உங்களது தமிழ்நாட்டுக்கே போய் விடுங்கள் என அவர்களது ஒப்பந்த நிறுவனங்கள் இந்த டிராவல்ஸ் வாகனங்களில் ஏற்றி அனுப்பி விட்டது. 
 

தற்போது கரோனா வைரஸ் காரணமாகத் தங்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்குத் தகவல் கொடுக்க அவர் மருத்துவ குழுவுக்குத் தகவல் கொடுத்து பரிசோதனை செய்ய உத்திரவிட்டார். பிறகு அந்த இடத்திற்கு வந்த தாளவாடி சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள்  வாகனத்தில் வந்த அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்யத் தொடங்கினார்கள். 
 

இதற்கிடையே தமிழக அரசின் கவனத்திற்கு இத்தத் தகவலை மாவட்ட எஸ்.பி.யும் கலெக்டர் கதிரவனும் கொண்டு சென்றனர். இதன் பிறகு 669 பேருக்கும் அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அரசு உத்தரவுப்படி 16 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவர்களை ஏற்றி இராமநாதபுரத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். 
 

இது பற்றி நம்மிடம் பேசிய எஸ்.பி. சக்தி கணேசன், இவர்கள் அணைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதில் யாருக்கெல்லாம் காய்சல் அறிகுறி இருக்கிறதோ அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மற்றவர்கள் பேருந்து மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு பேருந்திலும் போலீசாரும் உடன் சென்று தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட எல்லையிலும் அவர்கள் தடுக்கப்படாமல் நேராக இராமநாதபுரம் கலெக்டரிடம் இந்த 669 பேரும் பாதுகாப்பாக நாளைக்குள் ஒப்படைக்கப்படுவார்கள். என்றார்.
 

எங்கே நம் ஊருக்குச் செல்வோமா? மனைவி குழந்தைகள், தாய், தந்தை உறவுகளைப் பார்ப்போமா என்ற பய பீதியுடன் இருந்த மக்களுக்கு அச்சத்தை போக்கி சொந்த ஊருக்குப் பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்த ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி. சக்தி கணேசன் பாராட்டுக்குரியவர்கள் தான்.
 

இது டிஜிட்டல் இந்தியா என்று தனக்கு தானே கூறிக் கொண்டு ஒரே நாள் இரவில் உத்தரவைப் போட்டு விட்டார் பிரதமர் மோடி, ஆனால் பல நாள் இரவுகள் கடந்த பிறகே கரை திரும்பும் இது போன்ற மீனவர்கள் வாழ்வு போல இந்த இந்திய மண்ணில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்ற எதார்த்த நிலையையும் ஆட்சியில் இருப்பவர்கள் உணரவேண்டும்..! 

 

சார்ந்த செய்திகள்