Skip to main content

தவறான தகவல்களை பா.ஜ.க.வினர் பரப்பி வருகிறார்கள்: கனிமொழி

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
தவறான தகவல்களை பா.ஜ.க.வினர் பரப்பி வருகிறார்கள்: கனிமொழி

‘நீட்’ தேர்வை தி.மு.க. ஆதரித்தது என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பா.ஜ.க.வினர் பரப்பி வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘நீட்’ தேர்வை ஆதரித்து, பாராளுமன்றத்தில் தி.மு.க. கடந்த ஆண்டு குரல் எழுப்பியதாக சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை ‘நீட்’ தேர்வை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. தி.மு.க. தலைவர் கலைஞரும் இந்த தேர்வை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். அவரைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி பாராளுமன்றத்தில், நான் பேசியபோது ‘கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும்’ என்றும், ‘நீட்’ தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் கூறியிருக்கிறேன்.

தொடர்ந்து நான் பேசுகையில், ‘மாணவர்கள் 12–ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒரு நிலை உருவாகியிருக்கிறது.

கல்வித்துறையை பொறுத்தமட்டில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் உள்ளன. தமிழகத்திலும் பல கல்வி முறைகள் உள்ளன.

ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று கூறுவது நியாயமா? மாநில கல்விப் பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களை மத்திய பாடத் திட்டத்தின்படி நுழைவுத் தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் நியாயம்?

போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் இதற்கு ‘நீட்’ தீர்வல்ல. அந்தந்த மாநில அரசுகளே அம்மாநில மாணவர்களுக்கான நலனை பாதுகாக்க முடியும்.

எனவே கல்வியை மாநில அரசுகளிடம் விட, மத்திய அரசு நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளேன். இதனை அறியாமல் ‘நீட்’ தேர்வை தி.மு.க. ஆதரித்ததாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் உண்மை துளியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்