Skip to main content

'ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வைக் கைவிடுக!' - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

NEET EXAM STUDENTS UNION GOVERNMENT DMK MK STALIN

 

ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது” என்று புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மத்திய உள்துறை அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்தும் ஓரணியில் நின்று “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும்” என, ‘தரத்தைப்’ பற்றி நீண்ட காலமாக, பொதுவெளியில் வைக்கப்படும் சொத்தை வாதத்தைச் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்வைத்திருப்பது, இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகும்!

 

நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறது. குறிப்பாக, “இந்த ஆண்டு அந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை” என்று மத்திய பா.ஜ.க. அரசு வாதிடுவது, அக்கட்சித் தலைமையிலான ஆட்சிக்கு சமூகநீதிக் கொள்கைகள் மீதும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மீதும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேற மேற்கொள்ளும் முயற்சிகளின் மீதும் இருக்கும் நீங்கா வெறுப்புணர்வைக் காட்டுகிறது.

 

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு போல் ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொருபுறம், ஏதாவது ஒரு வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்து விடத் துடிக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து, சமூகநீதியை எப்படியெல்லாம் காயப்படுத்திச் சாய்த்திட முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகிறது.

 

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை வழங்காமல் மாநில ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்தாலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அவ்வாறு ஒப்புதல் அளித்த போது தமிழக ஆளுநர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் மசோதா மீது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் 26.09.2020 அன்று கருத்து (Opinion) கேட்கப்பட்டது. அதற்கு 29.10.2020 அன்று அவர் தனது கருத்தினை அளித்தார்” என்று கூறியதோடு நில்லாமல், ஆளுநர் அவர்களின் செயலாளர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தையும், அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் அளித்த கருத்தையும்  பொதுமக்கள் பார்வைக்கு இணைத்தே வெளியிட்டிருந்தார்.

 

தமிழக ஆளுநர் அவர்களின் அந்தச் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்துரையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது (in consonance with the Constitution of India)" என்று மிகத் தெளிவாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் ஆளுநர் அவர்கள், தமிழக அரசின் மசோதாவிற்கு 30.10.2020 அன்று ஒப்புதல் அளித்தார்.

 

தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும் போது, அவரின்கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான  நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழக மசோதா தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்ட நிலையில் புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவித்து தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போராடிப் பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான  சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அப்படியொரு விபரீத விளையாட்டை நடத்திடக் கனவிலும் நினைக்கக்கூடாது.

 

தமிழகத்திலும்- புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

“விளம்பர மோகத்தில்” மயங்கிக்  கிடக்கும் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்