
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாகத் தேசிய தகவலியல் மையம் (N.I.C.) விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஐ.பி.சி (I.P.C. - INDIAN PENAL CODE) சட்டத்தில் இருந்து பி.என்.எஸ். (B.N.S. - Bharatiya Nyaya Sanhita) சட்டத்திற்குத் தரவுகளை மாற்றுவதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால் முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்திருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை குறித்த அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ‘எஃப்.ஐ.ஆரை 14 பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் முடக்கப்பட்ட எஃப்ஐஆர்-ஐ எப்படி பார்க்க முடியும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது 'சிட்டிசன் போர்டலில் இருந்து 14 பேர் எஃப்ஐஆர்-ஐ பார்த்துள்ளனர்' எனத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பதிலளித்தார். மேலும் எஃப்ஐஆர்-ஐ காவல்துறை கசிய விட வில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்படும். எஃப்ஐஆர்-ஐ கசியச் செய்த 14 பேருக்கு எதிராக விசாரணை நடைபெறுகிறது'' என்றார்.
அதே சமயம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மற்ற சில குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்போது சி.சி.டி.நெஸ் ஆட்டோமேட்டிக்காகவே இணையத்தில் முடக்கப்பட்டுவிடும். ஐ.பி.சி. சட்டமானது, பி.என்.எஸ்.சட்டமாக மாறும்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆரை முடக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தாமதமான நேரத்தில் ஒரு சிலர் எஃப்.ஐ.ஆரை பதிவேடு பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வழியாக இந்த எஃப்.ஐ.ஆர். வெளியாகி இருக்கலாம் எந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும். அவ்வாறு வழங்குவது கட்டாயம் ஆகும். இந்த இரண்டு வழிகளில் தான் ஏதாவது ஒரு வழியில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்க வேண்டும். இது போன்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். வெளியில் வரக்கூடாது. இது மாதிரி வெளியிடுவது சட்டப்படி குற்றம்.
அவ்வாறு வெளியான எஃப்.ஐ.ஆரை கொண்டு பெரிய அளவில் விவாதம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை எந்த வகையிலும் தெரியக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கக்கூடிய தகவல்களை வைத்துப் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்ற அளவில் தகவல் கொடுப்பதும் தவறாகும். அதனால் அது மாதிரி கொடுக்கப்பட்ட தகவல்களை வெளியே தெரியவந்துள்ளதால் எஃப்.ஐ.ஆரை வெளியிட்டது தொடர்பாக கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார் என்பது குறித்துக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.