3 people lost their life due to wall collapse incident

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று (19.05.2025) மாலை கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்து பெய்து வந்தது. அதே சமயம் மின் தடையும் பல பகுதிகளில் ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட வளையகுளம் பகுதியில் நேற்று இரவு 07:00 மணியில் மின் இணைப்பானது துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அம்மா பிள்ளை என்பவர் வீட்டில் அவரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வெங்கட்டி அம்மாள் மற்றும் அவரது 10 வயது பேரன் வீரமணி என 3 பேரும் ஒன்றாக வீட்டின் திண்ணை பகுதியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கனமழை காரணமாக அம்மா பிள்ளையின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி வெங்கட்டி அம்மாள், அம்மா பிள்ளை, வீரமணி என அங்கிருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.

Advertisment

இதனையடுத்து வெங்கட்டி அம்மாள் நேற்று சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று (20.05.2025) காலை சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மதுரையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.