
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது.
இத்தகைய சூழலில் தான் சென்னையில் மதுரவாயல், கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், முகப்பேர், திருமங்கலம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று (20.05.2025) அதிகாலை முதல் லேசான மழை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில், இன்று (20.05.2025) காலை 10:00 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.