
முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த மே 18 ஆம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார். 'காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என நான்கு கட்சிகளுமே நாதகவிற்கு பகையாளிகள் தான் என தெரிவித்த, சீமான் தேர்தல்களில் பலமுறை தோல்வி அடைந்திருந்தாலும் தனித்துப் போட்டியிடுவதில் எந்த சமரசமும் இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம், சரிபாதி தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
அவரது உரையில், ''போரை நடத்தியது யார்? ஒப்புக்கு சிங்களர்கள் கொன்றார்கள். நடத்தியது அன்றைய காங்கிரஸ் கட்சியும் அதன் ஆட்சியும். கூட நின்றது இன்றைய ஆட்சியாளர்களான திமுக. போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்தது யார்? அன்றைய அதிமுக. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஒரு மாதம் பாராளுமன்றத்தையும் முடக்கிப் போட்ட பாஜக, பக்கத்தில் ஒரு தீவில் இத்தனை மக்களைக் கொன்று குவிக்கிறார்களே போரை தலையிட்டு நிப்பாட்டுங்கள் என்று பேசாத கட்சி பாஜக. இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நான்கு பேருமே தமிழ் பேரினத்தின் பகைவர்கள், எதிரிகள்.
திராவிட, இந்திய குப்பைகளை பொசுக்கித் தள்ள வேண்டும். மானத் தமிழ் பிள்ளைகளே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் முதல்வராக ராஜசேகர் ரெட்டி இறப்பின் பொழுது தமிழக முதல்வர் கலைஞர் அரசு பொதுவிடுமுறை அறிவித்ததோடு அரைக் கம்பத்தில் கொடியை இறக்கி துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. அதேநேரம் இலங்கையில் நடைபெற்ற போரில் கொத்துக்கொத்தாக தமிழர்களும் மக்களும் இறந்த பொழுதும், பிராபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான பொழுதும் தமிழகத்தில் இங்கிருந்த ஆளும் கட்சிகள் அந்த நாளை துயர நாளாக, தமிழின மக்களின் துயரம் என்று அறிவித்து விடுமுறை விட முடியாதா? அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட்டிருக்க முடியாதா? ஏன்? இந்த மண்ணில் எந்த கட்சி செய்தது. மக்கள் கொத்து கொத்தாக இறந்த இந்த மே 18 நாளில் ஒரு வருத்தச் செய்தியை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதிவு செய்தது உண்டா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்ததுண்டா? தமிழர்களின் வாக்கை வாங்கி வயிறு வளர்க்கும் இவர்கள் உன்னுடைய உணர்வுக்கு ஒரு மதிப்பு கொடுத்தார்களா? இந்த மண்ணுக்கென்று தொடங்கப்பட்ட கட்சிகள் உனக்காக நின்றிருக்கிறதா? இன்று ஈழ பிரச்சனைகள் குறித்து பேசாதவர்கள் ஈழப் பிரச்சினை பற்றி பேசினால் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைமை வந்தால் நம்மை விட முந்திக் கொண்டு பேசுவார்கள். காரணம் இவர்களுக்கு தேவை ஓட்டுதான் நம்முடைய உணர்வோ, உரிமையோ அல்ல'' என்றார்.