Skip to main content

விவசாயிகளின் மழை அச்சம்; நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்த முதல்வர்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Farmers fear of rain; The Chief Minister inaugurated the paddy storage facilities

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார். மேலும், ரூ.54 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.2.2023) தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் என எட்டு மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

 

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

 

பொது விநியோக திட்டப் பொருள்களைச் சேமித்து வைத்திடவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டங்களில் வட்ட செயல்முறைக் கிடங்குகளை நிறுவவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், உணவு தானியங்களைச் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள் 28,000 மெ.டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், சிங்கம்புனரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும், ஆண்டிமடம் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், பேரணாம்பட்டு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.5.30 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவுடன் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 28,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைகளைக் கொண்ட செயல்முறைக் கிடங்குகளை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்