cannes 2024 aishwarya rai in red carpet

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் விதமாக கொடுக்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) விருது, இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இதில் 7 இந்திய படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' என்ற பிரிவில் வர்ஷா பொல்லம்மா நடித்த இருவம் திரைப்படமும் திரையிடப்படுகிறது.

இந்த விழாவில் சிவப்புக் கம்பள அணிவகுப்பு பிரபலமாக பார்க்கப்படும் நிலையில் ஆண்டுதோறும் இதில் இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதாரி, ஷோபிதா துலிபாலா மற்றும் கியாரா அத்வானி, ஊர்வசி ரவுடேலா ஆகியோர் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள்.

Advertisment

இதில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு தனது மகளுடன் வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவருடைய வலது கை கட்டுப்போடப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அவருடைய உடல்நலம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்திருந்தனர்.

கடந்து 20 வருடங்களுக்கு மேலாக கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பில், தனது வித்தியாசமான ஆடையால் கவனம் ஈர்த்து வருபவர் ஐஸ்வர்யா ராய். அந்த வகையில் இந்த 77வது கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பில் வழக்கம் போல் தனது வித்தியாசமான ஆடையுடன் கலந்து கொண்டு அலங்கரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.