Skip to main content

நேற்று அம்பி, இன்று அந்நியன்; பிரதமர் மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Prime Minister Modi again speech about congress

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாகப் பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வந்தது. 

இதனையடுத்து, பிரதமர் மோடி நேற்று முன்தினம் (14-05-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிக குழந்தைகளைப் பற்றி பேசும்போது இஸ்லாமியர்களை மட்டுமே பேசினேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? இஸ்லாமியர்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்? ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலை. வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிகமான குழந்தைகள் உள்ளனர்.

Prime Minister Modi again speech about congress

நான் இந்து என்றோ அல்லது இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை. ஒருவர் எவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். உங்கள் குழந்தைகளை அரசே கவனிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள். என் நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் இந்து-முஸ்லிம் பிரிவினை பற்றி பேசும் நாளில், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக இருப்பேன். மேலும் நான் இந்து-முஸ்லிம் என்று வேறுபாடு பார்க்க மாட்டேன். இதுதான் என் தீர்மானம்” என்று கூறினார். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று (15-05-24) பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை என காங்கிரஸ் அரசு வெளிப்படையாக கூறியது. இதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டு எனது ஆட்சேபனையை தெரிவித்தேன். காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனித்தனி பட்ஜெட்டை ஒதுக்க விரும்பின. இஸ்லாமியர்களுக்கு 15% பட்ஜெட் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. தனி இந்து மற்றும் முஸ்லீம் வரவு செலவுத் திட்டங்கள் நாட்டுக்கு நன்மை தருமா? குஜராத் முதல்வராக இருந்த நான்தான் முதலில் எதிர்த்தேன். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது. முதல் நான்கு கட்டங்களில் மகாராஷ்டிரா இந்திய கூட்டணியை வீழ்த்தியது என்பதுதான் உண்மை.

Prime Minister Modi again speech about congress

காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் ஆட்சிக்கு வந்தால், மக்களைப் பிளவுபடுத்த முயற்சிப்பார்கள். காங்கிரஸின் இளவரசரும், இந்தியக் கூட்டணியும் சமாதானப்படுத்தும் பழைய விளையாட்டை விளையாடி வருகின்றன. பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை அவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சோதனைகளைத் தொடங்கி, தங்கள் ஆய்வகத்தில் கர்நாடகாவை மாற்றியுள்ளனர். கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரே இரவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளனர். காங்கிரசுக்கு இந்து-முஸ்லிம் அரசியல் மட்டுமே தெரியும், அவர்களுக்கு வாக்களிப்பவர்களுக்கே வளர்ச்சி. நான் அவர்களை அம்பலப்படுத்தும்போது, மோடி வகுப்புவாத அரசியலில் ஈடுபடுகிறார் என்று அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பு அலறுகிறது. அவர்களின் செயல்களுக்கு வரலாறு சாட்சி. நாட்டை ஒன்றாக வைத்திருக்க வேண்டுமா இல்லையா?. இந்தியர்களை இப்படி பிரிப்பது நல்லதா?” என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமரின் அறிக்கைகள் மேலும் மேலும் வினோதமானவை. மேலும், அவரது உரை எழுதுபவர்கள் தங்கள் சமநிலையை இழந்துவிட்டதைக் காட்டுகின்றன. நேற்று, இந்து-முஸ்லிம் பிரிவினையை விளையாடினால், பொது வாழ்வில் இருக்க தகுதியற்றவன் என்று கூறினார். இன்று அவர் தனது வழக்கமான விளையாட்டாக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து விளையாடுகிறார். மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை முஸ்லீம்களுக்கு மட்டுமே செலவிட மன்மோகன் சிங் திட்டம் தீட்டியுள்ளார் என்ற பிரதமரின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இது யூனியன் பட்ஜெட். இரண்டு பட்ஜெட்டுகள் எப்படி இருக்க முடியும்? பிரதமரின் அறிக்கைகளை இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே உற்றுப் பார்க்கும். இது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது, இந்து என்றோ அல்லது இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்று பேசிய பிரதமர் மோடி, மீண்டும் இஸ்லாமியர்கள் குறித்து பேசியதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து காங்கிரஸ், பிரதமர் மோடி பேசிய இரண்டு வீடியோக்களை இணைத்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.