Skip to main content

8 வழிச்சாலை திட்டத்தை முழுமையான விபரம் தெரியாமல் எதிர்க்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
green


சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்தின் நோக்கத்தையும், பயன்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்புகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

சேலம் ஓமலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையில் விண்ணப்பித்துள்ளனர்.

 

 

தங்கள் மனு பரிசீலிக்கப்படாததால், உரிய முறையில் பரிசீலித்து பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி தமாகா சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது, திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞரிடம் கருத்து கேட்டார். பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தனர். ஆனால் சில வழக்கறிஞர்கள், திட்டம் குறித்து மக்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் ஆட்சேபனை உள்ளது எனவும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்ட சாலையாக அமைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.

அவர்களின் கருத்தை கேட்ட நீதிபதி டி.ராஜா, தமிழகத்தில் முதன்முறையாக சென்னை - சேலம் 8 வழி சாலை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் நோக்கம் மற்றும் பயன்களை அறியாமல் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், இரு பெருநகரங்களுக்கிடையே அமைவதால், இடைப்பட்ட நகரங்கள், கிராமங்களை பயன்பெறும் எனவும்; பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமையவும் இந்த திட்டம் வாய்ப்பளிக்கும் என்றும் விளக்கமளித்தார். இதன்மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சரக்குகள் குறித்த நேரத்தில் சென்றடையும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய தமிழ் மாநில காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்