Skip to main content

சாராய பெண் கூட்டாளிக்காக எதிர்காலத்தை இழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

Published on 16/08/2019 | Edited on 17/08/2019

 

கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைசாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்  11.08.2019  இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து தீவிர சோதனை நடத்திக்கொண்டிருந்த போது  அருகில்  வந்த பொலீரோ காரை நிறுத்துவதற்கு முன்பாகவே காரை ஓட்டியவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரில் இருந்த பெண்ணை பிடித்ததுடன், காரிலிருந்த 144 மதுபாட்டில்கள்  மற்றும் 30 லிட்டர்  சாராயத்தையும், அவற்றை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

 

c

 

அந்த பெண்ணை விசாரித்ததில், ‘எனது பெயர் சமுத்திரக்கனி(48). விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி. நாங்கள் கூலி வேலை செய்ததுடன் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தியாகதுருகம் பகுதியில் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தோம். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது கணவர் இறந்ததால் தற்போது சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.

 

என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் சாராய வழக்குகள் உள்ளன. நான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தபோது அம்மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தேரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. நான் புதுச்சேரியிலிருந்து மது, சாராய பாட்டில்கள் கடத்தும் போது அவர் பல வகைகளில் உதவிகள் செய்தார். பின்னர் அவர் கடலூருக்கு மாறுதலாகி வந்த பிறகு நேரில் சந்தித்து எனது குடும்ப கஷ்டங்களை கூறினேன். அதனால் என்னை புதுச்சேரிக்கு காரில் அழைத்து சென்றார். அங்கு மது, சாராய பாட்டில்கள் வாங்கி கொண்டு சீர்காழி செல்வதற்காக திட்டமிட்டோம்” என்று கூறியுள்ளார்.

 

v

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வரும் சுந்தரேசன்   சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் வைத்துக்கொண்டு விதவையான அவருக்காக  புதுச்சேரியில் இருந்து அவ்வப்போது மதுபாட்டில்கள்  மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி  வந்துள்ளார். சுந்தரேசன் இன்ஸ்பெக்டர்  என்பதால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை வாகனத்தில் கடத்தி வருவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. சோதனை சாவடியிலும் அவரது காரை பணியில் இருக்கும் போலீசார் சோதனை செய்வது கிடையாது. இதனால் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சமுத்திரக்கனிக்கு தொடர்ச்சியாக உதவி செய்துள்ளார். 

 

இன்ஸ்பெக்டர் சுந்தரேசனின் பழக்கத்தை பயன்படுத்தி, சமுத்திரக்கனி இதை  தொழிலாகவே செய்து வந்துள்ளார். இதுதவிர இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அவரை விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கிருந்தும் சமுத்திரக்கனியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கொடுத்துள்ளார். உள்ளூர் போலிசாரிடம் சிக்கினால் அவமானம் என கருதி தப்பிக்க முயற்சித்து வசமாக மாட்டிக்கொண்டார்.

 

அதையடுத்து கடலூர் மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய காவல்துறை இன்ஸ்பெக்டரே விருப்பமான விதவையின் வாழ்வாதாரத்துக்கு உதவ போய் தன் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.