Skip to main content

மிஷ்கின் மீது இளம் தயாரிப்பாளர் சீட்டிங் குற்றச்சாட்டு... உதவுவாரா உதயநிதி?

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
Mysskin



"சித்திரம் பேசுதடி'. இதுதான் டைரக்டர் மிஷ்கினின் முதல் படம். ஸ்டார் வேல்யூ இல்லாததால் ரிலீசான சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து படத்தைத் தூக்கி விட்டார்கள். ஆனால் மிகச் சரியாக கணக்குப்போட்டு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், "சித்திரம் பேசுதடி'யை அண்டர்டேக் பண்ணி ரீ ரிலீஸ் செய்தார். படமும் பட்டையைக் கிளப்பியது, மிஷ்கினின் வாழ்க்கையிலும் ஒளி பிறந்தது.

ஆனால் இன்றோ ஒரு இளம் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார் மிஷ்கின். மிகவும் நொந்த நிலையில் இருக்கும் அந்த ஹீரோவான மைத்ரேயாவைத் தொடர்பு கொண்டு, ""என்னதாங்க நடந்தது'' எனக் கேட்டோம்.

'டிரான்ஸ் வேர்ல்டு'ங்கிற எங்க பேனருக்கு படம் பண்ணித் தருவதாக 2015 ஜூலை மாதம் அக்ரிமென்டில் கையெழுத்துப் போட்டார் மிஷ்கின் சார். இதற்காக பெரிய அமவுண்டும் அட்வான்சாகக் கொடுத்தோம்'' என்றவரிடம், ""எவ்வளவு எனக் கேட்ட போது'', "அதப் பத்தி வேணாம் சார். ஆனா தமிழ் சினிமாவுல யாரும் கொடுக்க முன்வராத தொகை. அவ்வளவு தான் சொல்லமுடியும்'' என்றவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.

"அட்வான்ஸ் கொடுத்து ஒன்பது மாசம் கழிச்சு, அதாவது 2016 மார்ச் மாசம் மிஷ்கின் சாரைச் சந்தித்து நம்ம கம்பெனிக்கு எப்ப சார் படம் பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, இப்ப "சவரக்கத்தி' படம் எடுத்துக் கிட்டிருக்கேன். ஆறு மாசத்துல முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு சொன்னார். ஆனா அந்தப் படம் ஒன்பது மாசம் ஆகியும் முடியுறமாதிரி தெரியல. ஒருவழியா அந்தப் படமும் முடிச்சப்புறம் கேட்டப்ப, விஷால் ஒரு படம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்ருக்காரு. அது முடிஞ்சதும் நம்ம படம்தான்னு சொல்லி"துப்பறிவாளன்' படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாரு.

'துப்பறிவாளன்' ஷூட்டிங் நடந்துக் கிட்டிருக்கும்போது மிஷ்கின் சாரோட ஆபீசுக்கு அடிக்கடி போவேன். அங்கிருக்கும் அவரோட மேனேஜர் ஜோயலிடம் கேட்டபோது, அடுத்து உங்களுக்குத்தான் படம். அந்தக் கதை சம்பந்தமாத்தான் சார் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்காருன்னு சொன்னபோது எனக்கும் நம்பிக்கை வந்துச்சு.

இதுக்கிடையில மிஷ்கின் சாரை கேஷுவலா சந்திக்கும்போதெல்லாம், "என்னைப் பத்தி இண்டஸ்ட்ரியில தப்புத் தப்பா பேசுவார்கள். அதையெல்லாம் நீ நம்பக்கூடாது. நான் உனக்கு அப்பா மாதிரி. என்னை நீ சந்தேகப்படக்கூடாது. என்மேல் நீ நம்பிக்கை வைத்துதான் ஆகணும்.' இப்படியெல்லாம் பேசுனாரு. ச்சே இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரேன்னு நானும் நினைச்சுக்கிட்டேன்.

2017 நவம்பரில் மிஷ்கின் சாரிடம் கேட்டபோதும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் திடீர்னு அவரின் செல்ஃபோன் நம்பரை மாத்திட்டாரு. அவரோட மேனேஜர் ஜோயலிடம் கேட்டபோது, இப்ப நான் அவரிடம் வேலை பார்க்கலை. நீங்களே போய்ப் பார்த்து கேட்டுக்கங்கன்னு கை விரிச்சுட்டாரு.

இந்த நேரத்துலதான் எந்தக் கதையைச் சொல்லி, ரெட் கலர் டிசைனெல்லாம் காண்பித்து, எங்க கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டாரோ, அதே 'சைக்கோ' டைட்டிலுடன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போறதா நியூஸ் வர ஆரம்பிச்சதும், நேரா மிஷ்கின் சார் ஆபீஸ் போய் ஒருநாள் முழுக்கக் காத்துக்கிடந்து அவரைச் சந்திச்சு கேட்டதும், "இனிமே உங்க கம்பெனிக்கு படமும் பண்ண முடியாது. அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித் தரமுடியாது'ன்னு சொன்னதும் என் தலையில இடிவிழுந்த மாதிரி ஆகிவிட்டது.

 

Vishal Udhayanidhi

 


"சரிங்க கோர்ட்டுக்கோ தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கோ போய் முறையிடலாமே?'' என நாம் கேட்டதற்கு, "மிஷ்கின் சாரோட மனசாட்சிதாங்க உச்சநீதிமன்றம். அதுல அவரு பொய் சொல்லாம இருந்தா சரி'' என்றார் விரக்தியுடன்.

கோலிவுட் ஏரியாவில் நாம் விசாரித்தவரையில் மைத்ரேயா தரப்பிலிருந்து மிஷ்கினுக்கு அட்வான்ஸ் பணமாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலில் விஷால் அணி சார்பில் எக்ஸ்கியூட்டிவ் மெம்பராக ஜெயித்தவர் மிஷ்கின். அதுவுமில்லாமல் விஷாலை வைத்து 'துப்பறிவாளன்' படத்தை எடுத்ததால் மேலும் மேலும் நெருக்கமானார். அந்த விஷால் தான் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராக இருப்பவர்.

இப்போது உதயநிதியை வைத்து 'சைக்கோ'-வை எடுத்து வருவதால் அரசியல் ரீதியாக தனக்கு சப்போர்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு இளைஞனின் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டார் மிஷ்கின். ஆனால் இதற்கெல்லாம் உதயநிதி உடந்தையாக இருப்பாரா என்ன?
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.

Next Story

பேய் படமா? கிரைம் திரில்லரா? - 'டெவில்' விமர்சனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
devil tamil movie review

சவரக்கத்தி படத்திற்குப் பிறகு டைரக்டர் மிஷ்கினும் அவரது தம்பி ஆதித்யாவும் இணைந்து உள்ள மற்றொரு திரைப்படம் டெவில். பார்ப்பதற்கு பேய் படம் போல் ரிலீஸ் ஆகி இருக்கும் இத்திரைப்படம் உண்மையில் பேய் படமா? அல்லது வேறு ஒரு படமா?

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை டெவில் படத்தின் மீதி கதை.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழு படத்தையும் சற்று விறுவிறுப்புடன் கூடிய காதல் கதையாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படம் விரிந்து போக போக பூர்ணா விதார்த் இடையிலான பிரச்சனைகளை விரிவாக பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைவாக இருப்பது படத்திற்கு அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை முழு படமாக எடுக்கும் பட்சத்தில் அதில் திரைக்கதைக்கு பல்வேறு ஸ்கோப்புகள் இல்லாமல் ட்ரை ஆக இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி படம் முழுவதும் நகர்கிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். இருந்தும் கதை சொன்ன விதத்திலும் திரைக்கதை அமைத்த விதத்திலும் ஆங்காங்கே திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் சுவாரசியத்தை கூட்டி இருப்பது படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது.

devil tamil movie review

படத்தின் நாயகன் விதார்த் ஒரு யதார்த்த வக்கீலாக நடித்திருக்கிறார். சுபஸ்ரீ இடம் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகள் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவருக்கும் சுபஸ்ரீக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கும் திரைப்படம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. பிரேமில் அழகாக தெரிகிறார், அழகாக நடிக்கிறார், அளவாக பேசி மனதை கொள்ளை அடிக்கிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கலங்கடித்து இருக்கிறார். 

மிஷ்கின் இசையில் பாடல்கள் மெலடி ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் இன்டீரியர் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நம் மனதில் இருக்கும் நெகட்டிவான எண்ணங்களை ஒரு டெவில் போல் சித்தரித்து காட்டியிருக்கும் இத்திரைப்படம், அதை இன்னும் கூட விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம். 


டெவில் - பேய் படம் இல்லை!