Skip to main content

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Published on 03/05/2025 | Edited on 03/05/2025

 

Sri Lankan pirates hit Tamil Nadu fishermen

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்கள் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் சொந்தமான படகில் 5 மீனவர்கள் நேற்று முன் தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை தாக்கியுள்ளனர். மேலும், மீன் பிடி உபகரணங்களை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த தாக்குதலில்,  மீனவர்களான ஆனந்த் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் உள்காயங்களோடும், முரளி மற்றும் சாமிநாதன் ஆகியோர் தலையில் பலத்த காயங்களோடும் கரைக்கு திரும்பியுள்ளனர். காயமடைந்த மீனவர்கள், தற்போது நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செருதூர், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்