Skip to main content

மாணவி அபர்ணா  கொலை வழக்கு... கைவிரித்த சி.பி.ஐ.... 9 ஆண்டுகளாக மறுக்கப்படும் நீதி...!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் தொடர்புடையவர்களை அதிவிரைவாக கண்டுபிடித்து அவர்களுக்கான தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்ற கால அவகாசம் அடுத்தடுத்து மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது டெல்லி என்பதால் வேகமாக செயல்பட்டிருப்பார்களோ என்று சில வழக்குகளை பார்க்கும் போது கேட்கத் தோன்றுகிறது. நாட்டின் உயர்ந்த புலனாய்வு பிரிவாக சி.பி.ஐ. வசம் நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்ட புதுக்கோட்டை மாணவி அபர்ணா வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பின்வாங்கி செல்கிறது சி.பி.ஐ. ஏன் இப்படி பின்வாங்கி செல்கிறார்கள். உண்மையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது ஒரு கிராமத்து மாணவி தானே என்ற அலட்சியப் போக்கா என்ற கேள்வி சாதாரண மக்களிடமும் எழுந்துள்ளது. 9 வருடங்களாக கண்ணீரோடு நீதி வேண்டி காத்திருக்கிறார்கள் அபர்ணாவின் பெற்றோர்கள்.  

 

Case of student Aparna ...


புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார். புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் வசித்து  புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். ( தற்போது பணி ஓய்வு ) இவரது மனைவி ராஜம் புதுக்கோட்டை,  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தற்போது வேறு பள்ளிகளில் பணியாற்றும் இவர்களது மகள் அபர்ணா (15), ( 2011 ல்)  மகன் நிஷாந்த்(6) ( 2011 ல்) ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.

2011 மார்ச் 9-ம் தேதி பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விட்டனர். தனியார் பள்ளியில் படித்து வந்த அபர்ணா மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் அன்றைய தினம் பிற்பகல் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் காலையில் வீட்டில் இருந்துள்ளனர். காலை சுமார் 10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அபர்ணாவை பாலியல் துன்புறுத்தலுடன், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து அறைக்குள்ளேயே மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டதுடன், பீரோவில் இருந்த சுமார்  25  பவுன் நகைகளையும் திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. நிஷாந்த் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சிறுவன் என்று நினைத்து அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றனர். இது குறித்து கணேஷ்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இக்கொலைக்கு தொடர்பிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கலைக்குமார் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு விசாரணை அலுவலர்களிடம் கொடுத்துள்ளார்.  அதன்படி நடைபெற்ற போலீஸாரின் அடையாள அணிவகுப்பில் சம்பவத்தின் போது கொலைக் குற்றவாளிகளை பார்த்ததாக கூறப்படும் அபர்ணாவின் சகோதரர் நிஷாந்த் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைக்குப் பிறகும் கொலையாளிகள் கைது செய்யப்படாததால் விசாரணையை  துரிதப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு பெற்றோர் மனு அளித்தனர். இக்கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர்,  அமைப்பினர்,  ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இருப்பினும் வழக்கின் நிலையில் முன்னேற்றம் இல்லை.

 

Case of student Aparna ...

 

இதையடுத்து வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி 2011 டிசம்பர் 13-ம் தேதி வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார். மாதங்கள் கடந்ததே தவிர புலனாய்வு பிரிவினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால் அபர்ணாவின் தந்தை கலைக்குமார் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து 2012 ஜூலை 13-ம் தேதி விசாரணையை நவம்பர் 2012- க்குள் முடிக்க புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா,  டிஐஜி ஸ்ரீதர், திருச்சி இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீண்டும் புதுக்கோட்டையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் இவ்வழக்கு மிகவும் சவாலாகவே உள்ளது. உண்மைக் குற்றவாளிகள்  விரைவில் பிடிபடுவார்கள் என்று செய்தியாளர்களிடம் புலனாய்வு அலுவலர்கள் கூறினர்.
   

மதுரை உயர்நீதிமன்றம்  விதித்த காலக்கெடுவை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் புலனாய்வு பிரிவின் மீது நம்பிக்கை இழந்த கலைக்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றகிளையில் முறையிட்டார். இம்மனுவை  2013 செப்டம்பர் 10-ம் தேதி விசாரித்த நீதிபதி இக்கொலைக்கான விசாரணை அறிக்கையை 27-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
   

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்புடையதாக கருதப்படும் அதாவது அபர்ணாவை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் புதுக்கோட்டை கணேஷ்நகர் ராஜ்முகமது மகன் சாகுல்ஹமீது, அபர்ணாவின் அம்மாவை பள்ளிக்கு அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் இ. முகமதுஹனீபா,  காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிவேந்தன்,  இசைவேந்தன் மற்றொருவர் சின்ராஜ் ஆகியோர் செப். 26-ம் தேதி நீதிமன்ற சம்மன் மூலம் புதுக்கோட்டை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜராகி, வாக்கு மூலம் அளித்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு செப். 27-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர்.
 

அதன்பிறகு சிபிஐ கண்காணிப்பாளர் ஹபீஸ்சிங் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை (2013 டிச.17) மாணவியின் பெற்றோரான கலைக்குமார் -  ராஜம் ஆகியோரிடம்  விசாரணை நடத்தினர். அதில் இக்கொலை தொடர்பாக சந்தேகிக்கும் நபர்கள் குறித்தும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 

Case of student Aparna ...

 

அதன் பிறகு பலமுறை சிபிஐ புலனாய்வு பிரிவினர்  நேரடி விசாரணை மேற்கொண்டும் இதுவரை மாணவி அபர்ணாவை கொன்ற உண்மை கொலையாளிகளை கைது செய்யவில்லை. 2018 ல் அபர்ணாவின் வன்கொலைக்கு நீதி வேண்டும். கொலையாளிகள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. அதனால் அரசியல் கட்சிகளும் தங்கை அபர்ணாவுக்காக நீதி கேட்க போராட முன்வர மறுக்கிறார்கள். அதனால் காலம் கடந்தாலும் நீதி வேண்டும் என்று போராடினார்கள்.
 

இந்த நிலையில் தான் கடந்த 2019 பிப்ரவரி யில் சி.பி.ஐ. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் பதில் சொல்லி வழக்கை முடித்துக் கொண்டனர். அதற்கான ஆவணங்களை திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டதாகவும் பதில் கூறியிருந்தனர். அதனால் பெற்றோர் தரப்பு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அங்கேயும் முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் போலீசாரின் புலனாய்வு செய்ய முடியாத போக்கை வறுத்தமளிக்கிறது. அதனால் ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையை நாடியுள்ளனர் பெற்றோர். அதற்கான பதில் அளிக்க நீதிபதி அவகாசம் கொடுத்திருக்கிறார்.
 

இது குறித்து அபர்ணாவின் தந்தை கலைக்குமார் கூறும்போது.. சம்பவம் நடந்த போது நேரடி சாட்சியாக என் மகன் இருந்தான். தடயங்கள் சேகரித்தார்கள். சந்தேகித்த நபர்களின் பெயர்களை சொல்லிவிட்டேன். அந்த நபர்கள் சம்பவத்திற்கு பிறகு எங்கெல்லாம் சென்றார்கள் என்ற விபரங்களை எல்லாம் போலிசார் சேகரித்தனர். அறிவியல் ஆய்வுகளும் உறுதி செய்தது. ஆனால் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினேன் 16 உயர்நீதிமன்ற நிதிபதிகள் வழக்கை விசாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நீதிபதியிடமும் கால அவகாசம் கேட்டே நீதி கிடைக்காமல் வழக்கை மூடி வைத்துவிட்டார்கள். அதன் பிறகு தான் நானும், என் மனைவியும் அரசு ஊழியர்கள். அரசு வேலைக்காக சென்றுவிட்ட போது வீட்டில் தனியாக இருந்த குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாமவ் போய்விட்டது. போலிஸ் விசாரனையும் புலனாய்வும் பலனளிக்கவில்லை. அதனால் ஒரு கோடி இழப்பீடு வேண்டும் என்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்திருக்கிறேன்.
 

இது மட்டுமின்றி கடந்த காலங்களில் நான் சந்திக்காத உயர் போலீசார் இல்லை. இப்போது கடந்த 2019 டிசம்பர் மாதம் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வரை என் மகள் கொலைக்கு நீதி வேண்டும் என்று தனித் தனியாக மனு அனுப்பி இருக்கிறேன். உச்சநீதிமன்றம் வழக்கு பதிவு செய்திருப்பதாக வந்த தகவல் மட்டும் எனக்கு திருப்தி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்திலாவது என் மகள் சாவுக்கு நீதி கிடைக்கிறதா என காத்திருக்கிறேன் என்றார் கண்ணீர்மல்க..  
 

9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மாணவி கொலைக்கு நீதி வேண்டும் என்று அவரது பெற்றோருடன் உறவினர்களும் சட்டப்படி போராடியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

உயர்ந்த விசாரனை பிரிவான சி.பி.ஐ. கூட அபர்ணாவின் கொலை குற்றவாளிகளை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது. எந்த சக்தி தடுக்கிறது. என்ற கேள்வி புதுக்கோட்டை மக்களிடம் எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.