Skip to main content

400 ஏக்கர் விவசாயம் நிலம் செழிக்க... இரு மாவட்ட மக்களின் பொதுப்பணி..!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 


கடந்த 16 ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரை, கரூர் மாவட்டம் வெள்ளியணை பெரிய குளத்திற்கு நீரேற்றம் செய்ய, முழுமுயற்சியுடன் இரண்டு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து, வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மழைக் காலங்களில் விவசாயத் தேவைக்குப் பயனளிக்கும் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக வறண்டு விவசாயம் செய்ய முடியாத பூமியாக உள்ளது.

 

இதற்குப் பிரதான காரணம் திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டாமல் போனதால் வெள்ளியணை பெரியகுளத்தில் நீர் நிரம்பவில்லை.

 

குடகனாறு ஆற்றிலிருந்து வரும் துணை வாய்க்கால், கடந்த 16 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் புதர்மண்டி கிடக்கிறது. குடகனாறு அணை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அழகாபுரி அருகே உள்ள கூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குடகனாறு, கூம்பூர் பகுதியில் துவங்கி ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, தம்மநாயக்கண்பட்டி வழியாக பாகநத்தம், சின்ன மூக்கனாங்குறிச்சி, பிச்சம்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, டி.கூடலூர் பகுதியைக் கடந்து பல கி.மீ பயணித்து கரூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. இறுதியாக துணை வாய்க்கால் மூலம் வெள்ளியணை பகுதி கடைமடையை வந்தடைகிறது. 

 

குடகனாறு அணையிலிருந்து துணை வாய்க்கால் வழியாக வெள்ளியணை பெரியகுளத்துக்கு இடைப்பட்ட தூரம் 54 கிலோமீட்டர். திண்டுக்கல் - கரூர் மாவட்டங்களில் விவசாயம் செழிப்பாக இருக்க, குடகனாறு மிக முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு துணை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதர் மண்டி கிடக்கும் துணை வாய்க்காலை தூர் வாருவதற்கு வெள்ளியணை பகுதி மட்டுமின்றி இரண்டு மாவட்ட பொதுமக்களும் இணைத்து கடந்த ஒரு வாரமாக  தூர்வாரி வருகின்றனர்.

 

தற்பொழுது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், விவசாயிகள், தன்னார்வ இளைஞர்கள் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிபலனின்றி வெள்ளியணை கடைமடை பெரிய குளத்திற்குத் தண்ணீர் நிரப்புவதற்குத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், குடகனாறு பாதுகாப்புக்குழு செயற்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், “கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடகனாறு அணை நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக 54 கிலோமீட்டர் இடைப்பட்ட தூரத்தில் உள்ள வாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே புதர் மண்டிக் கிடப்பதை தூர்வாரி வருகின்றனர். குடகனாறு ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு வந்து சேர்க்க முழு முயற்சியுடன் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 39 கி.மீ தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களது பங்களிப்பை முழு ஆர்வத்தோடு ஒத்துழைப்பு அளித்து வருவதால் இது சாத்தியமாயிற்று. இன்னும் மூன்று நாட்களில் முழுமையாக துணை வாய்க்கால் பகுதியைக் கடந்து வெள்ளியணை பெரியகுளத்தில் தண்ணீர் நிரப்பும் முழு முயற்சியில் இருக்கிறோம். அப்படி வெள்ளியணை பெரியகுளம் முழுவதுமாக நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பல ஆண்டு காலமாக எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். அதுமட்டுமின்றி நீர்ப் பிடிப்பு அதிகமாகி இதன் எதிரொலிப்பு அய்யர்மலை வரை இருக்கும்” என்றார்.

 

வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சரவணன், “குடகனாறு அணையிருந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பி உள்ளது. உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முழு ஈடுபாட்டுடன் துணை வாய்க்காலை தூர் வாரி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பின் கடைமடை பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற உள்ளனர். மேலும், வெள்ளியணை பெரியகுளமும் நிரம்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் குடகனாறு அணை நிரம்பும் நேரங்களில் அரசு, உபரி நீரை தவறாமல் திறந்துவிட்டால், எங்கள் பகுதி விவசாயம் செழிப்பதுடன், எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் அணையிலிருந்து உபரி நீரைத் திறந்துவிட்டு உதவ வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.