Skip to main content

ரூபாய் நோட்டு தடையை நான் ஆதரித்ததே இல்லை - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் தகவல்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
ரூபாய் நோட்டு தடையை நான் ஆதரித்ததே இல்லை - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் தகவல்

ரூபாய் நோட்டு தடையை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை, பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தேன் என்று ரிசர்வ் 

வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதியில் இருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி வரை பதவி வகித்தார். அவர் பதவி விலகிய 2 மாதங்கள் கழித்து, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

அந்த முடிவில், ரகுராம் ராஜன் பங்களிப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், அதை ரகுராம் ராஜன் மறுத்துள்ளார். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், ‘ஐ டூ வாட் ஐ டூ’ என்ற புத்தகம் எழுதி உள்ளார்.

ரூபாய் நோட்டு வாபசால், நீண்டகால பலன்கள் இருந்தபோதிலும், குறுகிய கால பாதிப்புகள் அதை முறியடித்து விடும் என்று நான் கருதினேன். எனவே, முக்கிய நோக்கத்தை எட்ட வேறு மாற்றுவழி இருப்பதாக தெரிவித்தேன். ரூபாய் நோட்டு தடையை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை.

அத்துடன், ரூபாய் நோட்டு தடையின் சாதக, பாதகங்கள் பற்றியும், அதே நோக்கத்தை அடைவதற்கான மாற்று வழிகள் குறித்தும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பு அனுப்பியது. அதில், ரூபாய் நோட்டு தடையை அமல்படுத்த எடுக்க வேண்டிய தயாரிப்பு பணிகள் குறித்தும், அதற்கு ஆகும் காலஅளவு குறித்தும் விரிவாக குறிப்பிட்டு இருந்தோம்.

அதன்பிறகு, இதுபற்றி பரிசீலிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழுவின் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கலந்து கொண்டார். ஆனால், நான் பதவியில் இருந்த காலத்தில், ரூபாய் நோட்டு தடை குறித்து முடிவு எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்கவில்லை. இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதி உள்ளார். 

சார்ந்த செய்திகள்