
டெல்லியில் இன்று (02.05.2025) காலை பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. மழையின் போது பலத்த காற்று வீசியுள்ளன. ஒரு சில இடங்களில் மின்னல் தாக்கியுள்ளது. பலத்த காற்று வீசியதால் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்தன.
அதிகாலையில் பெய்த பலத்த காரணமாக, பள்ளி மற்றும் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்பவர்களும் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர். ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. அதே சமயம் டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஒரு விமானம் அகமதாபாத்திற்கும், 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும் திருப்பி விடப்பட்டுள்ளனர். மேலும் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
துவாரகாவில் உள்ள கார்காரி கால்வாய் கிராமத்தில் இன்று காலை வீசிய பலத்த காற்று காரணமாகப் பண்ணையில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஜோதி (26 வயது) மற்றும் அவரது 3 குழந்தைகள் எனத் தெரிய வந்துள்ளது. அவரது கணவர் அஜய் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.