
தேசிய கல்விக் கொள்கை 2020இன் படி 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்ற நடைமுறைக்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதே சமயம் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் கீழ் முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்திற்குக் குறைவாக மதிப்பெண் (30 சதவீதம்) எடுக்கக்கூடிய மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பதற்கான நடைமுறை என்பது அமலுக்கு வர உள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி சி.பி.எஸ்.இ. சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி வீதத்திற்குக் குறைவாக மதிப்பெண் பெறக்கூடிய 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களிடம், ‘என்னுடைய குழந்தைகள் குறைவான மதிப்பெண்களை எடுத்திருந்தால் அவர்களை மீண்டும் அதே வகுப்பில் சேர்க்கலாம்’ என்ற ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மே மாதத்தில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் அடுத்த வகுப்பில் சேர்க்கக் கூடிய நடவடிக்கையைக் கடந்த வாரமே முடித்துவிட்டதால் இந்த புதிய நடைமுறை அடுத்த வருடமே முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறைக்குக் கல்வியாளர்கள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.