Skip to main content

பஞ்சாப் முதலமைச்சராக வரும் மார்ச் 16- ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மான்!

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Bhagwant Mann to take over as Punjab Chief Minister on March 16

 

நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பகவந்த் மானை ஆட்சிமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்தனர். 

Bhagwant Mann to take over as Punjab Chief Minister on March 16

இதையடுத்து, நாளை (12/03/2022) சண்டிகரில் உள்ள ராஜ்பவனுக்கு கட்சியின் மூத்த தலைவர்களுடன் செல்லும் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சராக வரும் மார்ச் 16- ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார் பகவந்த் மான். பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் காலனியில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Bhagwant Mann to take over as Punjab Chief Minister on March 16

இதனிடையே, இன்று (11/03/2022) டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழை பகவந்த் மான் வழங்கினார். அத்துடன் ஆசியும் பெற்றார். அதேபோல், கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். 

 

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, அமிர்தசரஸில் மார்ச் 13- ஆம் தேதி அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.