Skip to main content

இப்படியே போனா இந்தப் புதையல் சீக்கிரம் அழிஞ்சுரும்... -'பனைமரப் போராளி' பெரியண்ணன் சாமிக்கண்ணு!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018

னை மரங்களைப்  பாதுகாக்க தனி மனிதனாக முயற்சி மேற்கொண்டு ஒரு குழுவை உருவாக்கி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை உருவாக்கியுள்ளார் பொறியாளர் பெரியண்ணன் சாமிக்கண்ணு. இரவு சுமார் 9.30மணிக்கு அவரை சந்திக்க  அவரின் அறைக்குச்  சென்றேன். அலுவலகம் சென்று வந்து, ஆர்வத்துடன் காத்திருந்தார் பெரியண்ணன். "தென்ன மரத்த வச்சவன் தின்னுட்டு செத்தான், பன மரத்த வச்சவன் பாத்து செத்தான்... இந்தப் பழமொழியைப் பார்க்கும் பொழுது புரிகிறது பனைமரம் பலன் தர எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று. இந்தியாவில் மொத்தம் ஒன்பது கோடி பனை மரங்கள் உள்ளன என்று ஒரு கணக்கு கூறுகிறது. அதன்படி பார்த்தால் ஐந்தரை கோடி மரங்கள் தமிழகத்தில் தான் இருந்துள்ளன. தற்போது இதில் கிட்டத்தட்ட  இரண்டு கோடி மரங்கள் அழிந்துவிட்டதாகக்  கூறப்படுகிறது. இது போன்ற செய்திகளைப் படித்தபோதுதான் பனை மரங்கள் முழுமையாக அழிவதைத் தடுக்க என் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று தோன்றியது" என்று ஆரம்பித்தார்.

இப்படியே போனா இந்தப் புதையல்  சீக்கிரம் அழிஞ்சுரும்... -'பனைமரப் போராளி' பெரியண்ணன் சாமிக்கண்ணு!

உங்களைப்  பற்றி  சொல்லுங்கள்?

என் பெயர் பெரியண்ணன் சாமிக்கண்ணு. என்னோட சொந்த ஊர்  தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில்  உள்ள அசூர். விவசாயத்தை  சார்ந்து தான் இருந்துச்சு. ஆனா இப்ப எல்லாரும் பக்கத்துல இண்டஸ்ட்ரி வந்ததுனால அங்க வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. நான் ஸ்கூல் படிச்சது அசூர்ல தான். கல்லூரி,  திருச்சியிலும்  பின்  தஞ்சாவூர்லயும்  முடிச்சேன்.  இப்போ சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியரா வேலை பார்க்கிறேன். என் குடும்பம் ஊரில் இருக்கு. நான் ஒவ்வொரு  சனி ஞாயிறும்  பனை மரத்தைப் பார்க்க ஊருக்குப் போய்விடுவேன்.

உங்களுக்கு பனைமரம் நடவேண்டும், அதைப் பற்றிய  விழிப்புணர்வை பிறருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

நான் இதைப் பற்றி, இணையத்திலும் புத்தகங்களிலும் படித்தேன். ஒரு சிலர் இதன் நன்மையை பற்றி கூறும்பொழுது, இப்படி ஒரு மரம் அழிகின்றதே என வருத்தப்பட்டேன். இது அழிவதைத் தடுக்க நான் சில மரங்களை நட வேண்டுமென்று தோன்றியது. விதை எங்கே வாங்குவதென்று விசாரிக்கும் போது, என்னுடன் தங்கியிருந்த திருநெல்வேலி பையன் ஒருவன்,  அவனது  ஊருலிருந்து  வாங்கி அனுப்புவதாகச் சொன்னான்.  சரியென்று  முதலில்  ஒரு இரண்டாயிரம் விதைகளை  வாங்கி, எங்கள் ஊரில் உள்ள அய்யனார் கோவிலைச் சுற்றி, நானும் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்த எங்கள் ஊர் மக்களும் நட்டோம்.  2016 அக்டோபர் மாதம் தான் நட்டோம். அப்போது சரியான மழை இல்லை. 'என்னடா  மழை இல்ல, எப்படி வச்சது முளைக்கும்' என்று  யோசனையில் இருந்தேன். சில நாட்களுக்குப் பின் ஒரு ஒன்றரை  அடிக்கு வளர்ந்து நின்றது. அதன்பின்தான் இதை  இன்னும் நல்லா பண்ணனும் என்ற  எண்ணம் உருவானது, 2017 அக்டோபர் மாதம் அந்த திருநெல்வேலி பையனிடம்  சொல்லி மீண்டும், இந்த முறை  கொஞ்சம் அதிகம் வேண்டுமென்று சொல்லி ஒரு பத்தாயிரம் விதைகளை  அனுப்பச்  சொன்னேன். எங்கள் ஊரைச் சுற்றி ஒரு ஏழு ஊர்கள் இருக்கு. அந்தக் காலத்தில் இந்த ஏழு ஊர்களுக்கும் சேர்த்து ஒரு பெயருண்டு, "துளசிமாநாடு" என்று சொல்லுவாங்க. அதே  பெயரில் 'துளசிமாநாடு நண்பர்கள் குழு'னு ஃபேஸ்புக்ல பேஜ் ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்லதான் இப்போ இருக்கும் நண்பர்கள் சேர்ந்தாங்க. முதலில் 'தேனேரிப்பட்டி'னு  பக்கத்து கிராமத்துக்குப் போய் அங்குள்ள ஆற்றங்கரையில் பனை விதை நட ஆற்றங்கரையில் இடம் வேண்டும் என்று கேட்டிருந்தோம். அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் எங்களுக்காக சுத்தம் செய்து வைத்திருந்தனர். ஒரு 5000 பனை விதைகளை நட்டோம். 

இப்படியே போனா இந்தப் புதையல்  சீக்கிரம் அழிஞ்சுரும்... -'பனைமரப் போராளி' பெரியண்ணன் சாமிக்கண்ணு!

இதை நீங்கள் செய்ய ஆரம்பித்த போது மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?

அடுத்தடுத்த கிராமங்களுக்கு போகும்போது ஒரு சில கிராமங்களில் வேண்டாம் என்று முதலில் சொன்னார்கள். இதனால் என்ன பயன்னு கேட்டாங்க. நான் "நம்ம நிலத்துல இப்ப ரசாயன உரம் கலந்து போய் இருக்கு. அதுல இந்த பனம் பழத்தை (நுங்கு கொஞ்ச நாள் போனா பனம் பழமா மாறும்) நிலத்துக்கு போர வாய்க்கால்ல வச்சோம்னா அந்த நிலம் இயற்கையா மாறும்" என்று சொல்ல அதை சரியென்று சொன்னார்கள். அப்புறம் "எதுக்குப்பா  வாய்க்கால்ல வச்சிக்கிட்டு? ஆத்தோரம் வச்சு அந்த தண்ணீய நேரா நிலத்துக்கு திருப்பி விடலாம்" அப்படினும் சொன்னாங்க. 

பனை மரத்தினால் என்னவெல்லாம் பயன் இருக்கு?

நுங்கு, பதனி, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு இப்படி நிறைய... கருப்பட்டி சாப்பிட்டால் சுகர் குணமாகும். பனை மரம் இருந்துச்சுன்னா மழை  தானா வரும். மண்ணை இறுக்கமா பிடுச்சு வைக்கும். இதனால மண்சரிவு ஏற்படாது.  ஓலைச்சுவடி கூட பனை ஓலை தான். அதுமட்டுமா ஜல்லிக்கட்டு மாட ஜல்லிக்கட்டு அப்ப பனை மரத்துல தான் கட்டிவச்சிருப்பாங்க.  நமக்கும் பனை மரத்துக்கான உறவு ஆதிகாலத்திலிருந்தே இருக்கு.

 

இப்படியே போனா இந்தப் புதையல்  சீக்கிரம் அழிஞ்சுரும்... -'பனைமரப் போராளி' பெரியண்ணன் சாமிக்கண்ணு!

உங்களோட இலக்கு என்ன ?

எங்கள் குழுவின் பெயரை இன்னும் பதிவு செய்யவில்லை. அதை பண்ணனும்.  எங்க முயற்சினால இதுவரைக்கும் 12700 மரம் நட்டிருக்கோம். எங்களோட அடுத்த இலக்கு ஒரு லட்சம் மரம் நட வேண்டும் என்பதுதான். இதுக்கு இளைஞர்களின் பங்கு ரொம்ப அவசியம். அவர்கள் முன்வந்து முடிஞ்ச வரைக்கும் அவுங்க ஊர்ல பனை விதைகளை நடவேண்டும். அதுமட்டும் இல்லை  ஒரு கிராமத்துல 500 மரம் வைத்தால், அந்த கிராமத்துக்கு ஐந்து லட்சம் வருமானம் வரும். ஒரு மரத்திலிருந்து 15 கிலோ வெல்லம் எடுக்கலாம். ஒரு ஏக்கர் கரும்பிலிருந்து எடுக்கும் சக்கரைக்கு நிகராக இந்த பனைவெல்லம் கிடைக்கும். மற்ற மரங்களைப்போல் இதற்கு  பராமரிப்பு தேவை இல்லை. ஒரு விதையோட விலை மூன்று ரூபாய் தான். இவ்வளவு நன்மைகள் செய்யும் புதையலை நமக்குத் தெரிந்தே அழிய விடக்கூடாது. தனிப்பட்ட முறையில் அடுத்த தலைமுறைக்காக இந்த பனை மரத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு நாங்கள் இப்பொழுது இருந்தே முயற்சி செய்துகொண்டு வருகிறோம். எங்க துளசி மாநாடு நண்பர்கள் குழுவோட செயல்படவும் இளைஞர்கள் முன்வரணும். கார்ப்பரேட் உலகில், சம்பள போரில் இளைஞர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க சமீப காலமாக இவரைப் போன்ற பல இளைஞர்கள் இயற்கையை காக்க, விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி செயலாற்றி வருவது மிகப்பெரிய ஆறுதல். இவர்களால் தான் நாம் எதையெல்லாம் இழந்து வருகிறோம் என்பது தெரிகிறது. இவர்களுடன் சேர்ந்து செயல்படவேண்டியது நமது கடமை என்ற உணர்வு வருகிறது.