Skip to main content

முதல்வரின் நேரடி தேர்வு; யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

Published on 08/07/2024 | Edited on 09/07/2024
Background of Arun IPS selection as Chennai Commissioner

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ், புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார். 

காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், போக்குவரத்து துறையாக இருந்தாலும், குற்ற புலனாய்வாக இருந்தாலும், அதிரடிக்கு பெயர்போனவர் ஐபிஎஸ் அதிகாரியான அருண். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார். பின்னர், காவல் உடுப்பு மீதும் காவல் துறை மீதும் இருந்த தீராக் காதலால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்தார். இதையடுத்து, 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அருணுக்கு முதல் பதவியே மிகவும் சென்சிடிவ் ஏரியாவில் கிடைத்தது. நாங்குநேரி ஏஎஸ்பி ஆக தனது கேரியரை தொடங்கிய அருண், தூத்துக்குடி மாவட்டத்திலும் தனது பணியை திறம்பட செய்தார். இதன் காரணமாக அவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் அவரை பலரும் வெகுவாக பாரட்டப்படுவதற்கு வழிகுத்தது. அதன் காரணமாகவே, திமுக, அதிமுக என ஆட்சி எதுவாகினும் அங்கு துடிப்பான அதிகாரியாக அருண் கோலோச்சி வந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அனுபவங்களை பெற்ற பிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய நகரமான அண்ணாநகரின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றினார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012ல் காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று.. திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார். மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். பின் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.

2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண் ஐபிஎஸ், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. 2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். இப்படி, வாழ்விலும் பணியிலும் அடுத்தடுத்து உயரங்களைத் தொட்ட அருணுக்கு, இன்னொரு மணிமகுடத்தை திமுக அரசு சூட்டியுள்ளது. ஜூலை எட்டாம் தேதியான இன்று.. சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எவரிடமும் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக சென்னை மாநகர கமிஷனராக நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் ரவுடிகள் களை எடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து. தலைநகர் ரவுடிகள் நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Next Story

‘பயணிகளின் கவனத்திற்கு’ - மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
'Attention of passengers'- change in Chennai electric train service!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து நாளை (14.07.2024) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில் பயணிகள் நலன் கருதி சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நாளை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (14.07.2024) தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

'Attention of passengers'- change in Chennai electric train service!

பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆந்திராவில் இருந்து தென்மாநிலங்களுக்குக் கடத்தப்படும் கஞ்சா; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
cannabis smuggled from Andhra, Telangana to Tamil Nadu, Karnataka, Kerala by car and train

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்திய வரப்படுவதாக வந்த ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள வேலூர் மாவட்டம் சைணகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.  கஞ்சாவைக் கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குடியரசன் (24) கோகுல்குமார் ( 26) மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட குடியரசன் மற்றும் கோகுல்குமார் ஆகிய இருவரும் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக டாடா நகர் பகுதியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ரயிலில் சோதனை மேற்கொண்டனர். 

முன்பக்க சாதாரண பெட்டியில் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையிலிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பாண்டல்களில் இருந்த சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுப்ரமணியம் (21) மற்றும் அப்துல் (18) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வனப்பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளுக்குள் நுழைந்து மாநில இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பெரும் முயற்சிகள் எடுத்தாலும் கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பப்படும் குருவிகளுக்குத் தரப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் அவர்களை இந்த தொழிலைக் கச்சிதமாகச் செய்யவைக்கிறது.