Skip to main content

சப்தரிஷி ஈசுவரர் திருக்கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
300-year-old inscription found in Saptharishi Eswarar Temple

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள கொப்பம்பட்டி எனும் கிராமம். இவ்வூரின் பழைய பெயர் கொப்பமாபுரி ஆகும். இவ்வூரிலுள்ள சப்தரிஷி ஈஸ்வரர்-குங்குமவல்லி அம்மன் கோயிலில் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலகத் தமிழாராச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது;

300-year-old inscription found in Saptharishi Eswarar Temple
சு.தாமரைப்பாண்டியன்

நாயக்க மன்னர் கால கல்வெட்டு:

திருக்கோயில் சுவடித் திட்டப் பணித் தொடர்பாக கொப்பம்பட்டி சப்தரிஷி ஈஸ்வரர் கோயிலில் பழமையான சுவடிகள் இருப்பு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோயிலில் "கொப்பமாபுரித் திருவூடல்" எனும் பழைய இலக்கிய ஓலைச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பதிப்பிக்கப்படாத இந்த ஓலைச்சுவடியை நூலாக்கும் பணி தற்பொழுது எனது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நூலாக்கப் பணியின் பொருட்டு கோயில் வரலாறு திரட்டுதல் தொடர்பாக மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது கோயிலில் இருந்த  பழமையான கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. கல்வெட்டு கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் வலது பக்கம் சுவரின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அது போல அதேக் கல்வெட்டுச் செய்தி கோயிலின் நுழைவு வாயிலின் தெற்கு பகுதியிலும், தளிகை ஆற்றின் கிழக்குப் பகுதியிலும் தனிக் கல்லில் வெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டை துறையூர் பாளையத்தின் ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் அவர்கள் கி.பி.1718 ஆம் ஆண்டு  வெட்டி வைத்துள்ளார்.

ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வரலாறு:

கி.பி.1592- ஆம் ஆண்டு விஜயநகர பேரரசின் மதுரை பகுதிக்கு ஆளுநராக விஸ்வநாத நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர் அரிய நாத முதலியாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார். தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்தார். பிற்காலத்தில் கி.பி. 1801 ஆம் ஆண்டு பாளையப்பட்டு முறை ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பகுதியான "மனுகுண்டி " நகரிலிருந்து வந்த வேம ரெட்டி வம்சத்து பரம்பரையினர் துறையூர் பகுதியை ஜமீன்தார்களாக இருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.இவர்கள் 'விஜய வெங்கிடா சலபதி' எனப்பட்டம் சூட்டிக் கொண்டு துறையூரை 18 பரம்பரைக்கும் மேலாக ஆண்டு வந்துள்ளமையினை  அறிய முடிகிறது. மேலும் கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் துறையூர் பாளையக்காரரான வல்லக்கோல் எர்ரம ரெட்டியாரின் மகன் நல்லப்ப ரெட்டியார் பாழடைந்து கிடந்த சப்தரிஷி ஈஸ்வரர் திருக்கோயிலைப் புதுப் பித்து மறுபடியும் கட்டியுள்ளார். மேலும் சில கோயில்களை அவர் கட்டியதாகவும் வரலாறு வழி அறிய முடிகிறது.

300-year-old inscription found in Saptharishi Eswarar Temple

கல்வெட்டு தரும் நிலதானச் செய்தி:

கி.பி.1718 - ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் தியதியில் ஸ்ரீ வீர வேங்கட தேவ மகாராயர் கனகிரி நகரத்தை ஆண்டு வந்தார். அப்பொழுது திருச்சிராப்பள்ளியின் வடக்கில் அமைந்த துறையூர் சீமையில் மூலைபத்து கொப்பமா புரி சப்தரிஷி ஈஸ்வரர் - குங்கும வல்லியம்மன் திருக்கோயில் சுவாமி பூசைக்குரிய நெய்வேத்தியத்திற்கு துறையூர் பாளையக்காரர் நிலதானம் வழங்கியுள்ளார். இந்த நில தானம் வழங்கியவரின் மூதாதையரான வல்லக்கோல் நல்லப்ப ரெட்டியார் (தாத்தா) பெயர் முதலில் சுட்டப்பட்டுள்ளது. அதன் பின் ந.ஏர்ரம ரெட்டியார்  மகன் நல்லப்ப .ரெட்டியார் அவர்கள் திருக்கோயிலுக்கு நெய்வேத்தியம் பண்ண பூமிதானம் செய்தார் என்று சுட்டப்பட்டுள்ளது.

பூமி தானம் பற்றிய  விவரம் வருமாறு:

காரப்புடையாம்பட்டி எல்லைக்கு வடக்கு ; தளிகை ஆற்றுக்கு கிழக்கு, நாகய நெல்லூர் தலைக்கு தெற்கு; தம்மம்பட்டி வகைக்கு மேற்கு. இந்த எல்லைக்கு உள்பட்ட மரங்கள், கால்நடை அடைக்கும் பட்டி, தென்னந்தோப்பு, புளியந்தோப்பு , கிராமத்தின் வரி வருவாய் ஆகியவை மேற்படி கோயிலுக்கு உரியவை ஆகும். மேலும் காரப் புடையாம்பட்டியில் உள்ள ஆறும், தென்னந் தோப்புக்குக் கிழக்கில் உள்ள நஞ்சையில் 6 செய் நிலமும் (10.5 ஏக்கர் நிலம்) கோயிலுக்குப் பூமி தானமாக ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வழங்கியுள்ளார் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேண்டுதலை நிறைவேற்றும் குழந்தை முனீஸ்வரர்; பூஜை சோறு போட்ட பக்தர்கள்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Muneeswarar the wish-fulfilling child; Devotees who put rice in the puja

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் நாகுடி அருகே உள்ள அரியமரக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. குழந்தை முனீஸ்வரர் மட்டும் வழக்கம் போலத் திண்டு அமைத்து வேல் மட்டும் நடப்பட்டிருக்கும் உருவம் இல்லை. ஆனால் பரிவார தெய்வங்களுக்குச் சின்ன சின்ன சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பூஜை போடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டு பூஜை கோயில் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.

பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது நேற்று காலை முதல் நேர்த்திக்கடன் வைத்திருந்த பல கிராமங்களையும் சேர்ந்த பக்தர்கள் செங்கிடாய்களை வாங்கி வந்து கோயிலில் கட்டினர். மாலை வரை நூற்றுக்கணக்கான கிடாய்கள் வந்த பிறகு கோயில் பூசாரிகள் குலவையிட்டு சாமியாட்டத்தைத் தொடங்க ஒவ்வொரு கிடாய்க்கும் மாலை போட்டு மஞ்சள் தண்ணீர் தெளிக்கக் கிடாய்கள் தலையசைக்க அடுத்த சில நிமிடங்களில் தலைகள் வெட்டப்பட்டது. 

Muneeswarar the wish-fulfilling child; Devotees who put rice in the puja

வெட்டப்பட்ட கிடாய்களை உரித்து சுத்தம் செய்ய ஒரு குழுவினர். எலும்புகள், கறிகளை தனித்தனியாகப் பிரித்து எடுக்க ஒரு குழுவினர். கால், தோல் என அத்தனையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் மிளகாய், மல்லி சரக்குகளைப் பாரம்பரிய முறையிலேயே இடித்துக் கொடுக்க, தயாராக இருந்த சமையலர்கள் செங்கிடாய் கறிகளை வேகவைத்து ரசமாகக் கொதிக்க வைத்தனர். மற்றொரு பக்கம் மூட்டை மூட்டையாக அரிசிகள் வேகவைத்துக் குவியல் குவியலாகச் சோறு குவிக்கப்பட்டிருந்தது.

சமையல் முடிந்து மாலை நேரப் பூஜைகள் தொடங்கும் போது அரியமரக்காடு சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஆயிரக்கணக்கில் வந்து குழந்தை முனியை வழிபட்டதோடு ஆளுக்கொரு பாக்குமட்டைகளை எடுத்துக் கொண்டு வயல்வெளியில் அமர சுடச்சுடச் சமைக்கப்பட்ட சோறுகளைத் தட்டுகளில் வைத்துக் கொதிக்க கொதிக்க வைக்கப்பட்ட கறியும் ரசமும் சேர்த்து ஊத்த பத்தாயிரம் பக்தர்களும் சுவைத்து ருசித்தனர். 

Muneeswarar the wish-fulfilling child; Devotees who put rice in the puja

இக்கோயிலில் இருந்த பக்தர்கள் கூறும் போது, “அரியமரக்காடு மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணமாகிப் பல வருடங்களாகக்  குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என நேர்த்திக்கடன் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேறினால் செங்கிடாய் வாங்கி தருவதாக வேண்டிச் செல்வார்கள். இவ்வாறு நேர்த்திக்கடன் வைத்துச் செல்பவர்களுக்கு அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பாக்கியம் கிடைப்பதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் குழந்தை முனீஸ்வரருக்குப் பூஜை திருவிழாவின் போது ஆட்டுக்கிடாய் வழங்கி பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற கிடா வெட்டு பூஜையில் தங்கள் வேண்டுதலின் படி செங்கிடா வாங்கி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிடா வெட்டு பூஜைக்குப் பிறகு குழந்தை முனீஸ்வரர் கோயில் திடலில் 10,000 பேருக்குக் கறி விருந்து வழங்கப்பட்டது. அதே நேரம் இந்த பூஜை சோற்றைப் பெண்கள் சாப்பிடமாட்டார்கள் அதனால் அவர்களுக்காகக் கோழி கறி சமைத்து வழங்கப்படும்” என்றனர். 

Next Story

ரூ.11 லட்சம் மதிப்பிலான பணத்தால் சுவாமிக்கு அலங்காரம்; ஆச்சர்யமடைந்த பக்தர்கள்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Swami was decorated with money worth Rs.11 lakh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவிலில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பதினோரு லட்சம் மதிப்பிலான பணத்தாலும் நகைகளாலும் அம்மன் சிலை முழுவதும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றியும் வாழை இலையில் அரிசி தேங்காய் மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து தீபம் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சிறப்பு விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்.

10 நாட்களுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்றும், ஜாதக ரீதியான தோஷங்கள் தொழில் பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் கண் திருஷ்டி குழந்தை இல்லாத தம்பிகளுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் கடன் பிரச்சினை தீரும் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தப் பூஜையில் மந்திரங்கள் முழங்க அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

The website encountered an unexpected error. Please try again later.