இந்தக் கடல் இல்லையென்றால் சென்னை என்னவாகும்...
- "பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்

ஒரு பக்கம் டால்பின்கள் இறந்துள்ளன, மறுபக்கம் மீன்கள் இருந்துள்ளன, இடங்கள்தான் வேறே தவிர கடல் ஒன்றுதான். 'நாம் வானத்தை பார்த்த அளவிற்கு கடலை பார்த்ததில்லை, ஏனென்றால் கடல் அவ்வளவு ஆழமானது' என்று கூறுவார்கள். ஆம், உண்மைதான் அதனால்தான் நாம் டெல்லி புகையை பற்றி பேசிய அளவிற்கு மீன்கள் இறந்ததை பற்றி பேசவில்லை. நம் பக்கத்துவீட்டு கழிவிலிருந்து, பன்னாட்டு கழிவு வரை கடலுக்குள்தான் அனைத்தும் இருக்கிறது. டெல்லி புகை மண்டலமாக ஆனதிற்கும் கடல்தான் காரணம். அது எப்படி என நம்மிடம் கூறுகிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக செயல்படும் அமைப்பான "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன்.
தூத்துக்குடியில் டால்பின்களும், சென்னையில் மீன்களும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்த இரண்டிற்கும் அடிப்படையில் ஏதாவது தொடர்பு உள்ளதா?
இரண்டுக்கும் வேற,வேற காரணம் இருக்கு. அடிப்படையா பாத்தோம்னா நாம கடல குப்பைத்தொட்டியா பாக்குறதுதான் இதுக்கு காரணம். நாம கடல்லதான் எல்லா கழிவையும் கொட்டுறோம். நகரக்கழிவு, அணுஉலைக்கழிவு, தொழிற்சாலை, அனல்மின் நிலையம்னு எல்லா கழிவையும் கடல்லதான் கொட்டுறோம். இப்போ அடையாறு ஆத்துல சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அதிகமா விட்டுருக்காங்க. அதான் முக்கியமான ஒரு காரணம். டால்பின்கள் மடை மாறி போவதற்கு கடல்ல இருக்க கழிவு, கடற்படை பயன்படுத்துற கருவிகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காலநிலை மாற்றங்கள், ஏற்கனவே கடல்ல மாற்றங்கள் கொண்டு வந்துதான் இருக்கு. இது எதையுமே புரிஞ்சுக்காம, முழுசா தெரிஞ்சுக்காம இந்த அரசாங்கம் இருக்கு. 2004ல சுனாமி வந்ததுக்கப்புறமுமே கடல்ல நிறைய மாற்றங்கள் நடந்துருக்கு. அதை பத்தின ஒரு அறிவியல் ஆய்வுகூட இவுங்க பண்ணல. அப்படி இருக்கிறப்ப நம்மால் எப்படி இந்த இழப்புகள புரிஞ்சுக்க முடியும்? எப்படி இதை தடுக்க முடியும்?

அமைச்சர் ஜெயக்குமார் நல்ல தண்ணி அதிகமா கலந்தனாலதான் மீன்கள் இறந்திருக்குனு சொல்லிருக்காரு. அதபத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?
மடவை மீன் இரண்டு தண்ணிலயுமே வாழும். பொதுவா இந்த மீன்கள் கழிமுக பகுதியிலதான் குஞ்சு பொரிக்கும். எல்லா மீன்களும் உயிர் வாழ்ந்துரும்னு சொல்லமுடியாது, அதுக்கு பழக்கப்பட்ட மீன்களெல்லாம் வாழும். அதனால எப்படி இப்படி சொன்னாருன்னு தெரியல. சகிப்புத்தன்மை கொண்டதுதான் அது. அதனால இப்படி சொல்லிருக்குறது கவலையளிக்கக்கூடிய ஒரு விஷயம்தான். எந்தத் தகவலையும் முழுசா ஆராயாம, மக்கள்ட்ட பொய்யா ஒரு தகவல சொல்றதாதான் இதையும் பாக்குறோம்.

எண்ணூர்ல கலக்குற கழிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருக்கா?
அதுக்கும், இதுக்கும் சம்மந்தமில்லை. அதான் எண்ணூர் ஆத்துல இருக்குறதுதான் நச்சுப்பொருளா மாறிடுச்சுனு ஒரு அறிக்கை வந்துருக்கு. நிச்சயமா அது அடையாறு ஆத்துக்கு வராது. அங்குள்ள மீன்கள்தான் நச்சுத்தன்மை உள்ளதா மாறிருக்கு.
அரசு சுற்றுச் சூழலை பொறுத்தவரைக்கும் எதுலயும் கவனம் செலுத்தலனு நெனைக்குறிங்களா?
ஆமா நிச்சயமா, நிச்சயமா... நதினா என்ன? ஆறுன்னா என்ன? கழிமுகம்னா என்ன? அப்டிங்குறதே தெரியாம இருக்கு. அப்படி ஒரு அக்கறையற்றதாதான் இந்த அரசு இருக்கு.
2004ல சுனாமி வருவதற்கு முன்னும் இப்படித்தான் மீன்கள் உயிரிழந்து கரைக்கு வந்தன என்று சொல்றாங்க. அதை பற்றி?
ஆமா ...அப்படி தான் நடந்துச்சு. அதுக்காக இப்பவும் சுனாமி வரும்னு சொல்ல முடியாது. டால்பின்கள் கரை ஒதுங்குவது, மீன்கள் இறப்பது இதெல்லாம் அப்பப்போ நடந்துட்டுதான் இருக்கு. இதுக்கான ஆய்வு பண்ணி உண்மையான காரணத்தை சொல்லணும். இப்படி நன்னீர் புகுந்துருச்சுனு பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாது.
2004ல நடந்ததுக்கும், இப்போ நடக்குறதுக்கும் சுத்தமா சம்மந்தம் இல்லைனு சொல்றீங்களா?
வித்தியாசம் இருக்குனு சொல்றேன்.
இந்த சம்பவங்கள் தொடர்பா என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீங்க நினைக்குறீங்க?
கடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு, மற்றும் கடலைப் பற்றிய ஆய்வுகள் ஆகியவை மேற்கொள்ளப்படணும். கடலில் கொட்டுற கழிவுகளை முழுவதுமா நிப்பாட்டணும். கடலோட அமிலத்தன்மை கூடுது, அமிலத்தன்மை கூடாம இருக்க நடவடிக்கை எடுக்கணும். அணுக்கழிவு, வாகன புகை, தொழிற்சாலை புகை அதெல்லாம் கடல் வாங்கிக்கும். அதனால அதெல்லாம் குறைக்கணும். இப்படி பல நடவடிக்கைகளை அரசு எடுக்கணும்.
அப்போ கடலில் கலக்குற கழிவுகள் மட்டுமில்லாம புகையாலயும் கடல் மாசுபடுதா?
ஆமா... கடல் 25ல இருந்து 30சதவீத நகர புகைய வாங்கிக்கும். கடல் பக்கத்துல இருக்கனாலதான் புகையால சென்னை தத்தளிக்கல, கடல் இல்லாததாலதான் டெல்லி தத்தளிக்குது. கடல் இல்லையென்றால் சென்னையும் புகைமயமாகத்தான் இருக்கும்.
பேட்டி : கமல் குமார்
படங்கள் : குமரேசன்